எனக்கு எல்லாமே சாந்திதான்.. மனைவி இறந்த பின் கவுண்டமணி மனநிலை என்ன?.. விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: காமெடி கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கவுண்டமணி. அவரும் செந்திலும் சேர்ந்து ரகளையான பல காமெடிகளை செய்திருக்கிறார்கள். அதன் காரணமாக இன்றளவும் அவர்களுக்கென்று ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருகட்டத்தில் வயோதிகம் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருசில படங்களில் நடித்தார்கள். கவுண்டமணியை பொறுத்தவரை கடைசியாக அவர் ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க கவுண்டமணியின் மனைவி சாந்தி உயிரிழந்தது அவரை பெருத்த சோகத்தில் தள்ளியிருக்கிறது. இந்நிலையில் நடிகர் சௌந்தர் சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
கவுண்டமணி என்று சொன்னாலே அறிமுகம் எதுவும் தேவையில்லை. உடுமலைப்பேட்டையில் பிறந்த அவருக்கு சிறு வயது முதலே நடிப்பதில் ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஊரில் போடப்பட்ட நாடகங்களில் நடித்தார். அங்கு தனக்கு கிடைத்த அப்ளாஸை அடுத்து எபப்டியாவது சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்ற வெறி பிறக்க; ஊரிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு வந்த அவர் சில நாடக க்ரூப்புகளில் சேர்ந்து கிடைத்த சின்ன சின்ன வேடங்களை எல்லாம் ஏற்று நடித்தார். அப்படி அவர் நடிக்கையில் ஏகப்பட்ட கவுண்ட்டர்களை போட்டார். இதன் காரணமாக அவருக்கு கவுண்டமணி என்று பெயர் மாறியது. தொடர்ந்து நாடகங்களில் நடித்துவந்த அவருக்கு சர்வர் சுந்தரம், ராமன் எத்தனை ராமனடி, தேனும் பாலும் உள்ளிட்ட படங்களில் சிறு ரோலில் நடித்தார்.
இது எப்படி இருக்கு?: இப்படிபட்ட நிலைமையில்தான் அவருக்கு பாக்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோரின் அறிமுகம் கிடைத்தது. அந்த சமயத்தில்தான் பாரதிராஜா தனது முதல் படமான 16 வயதினிலே படத்தை இயக்குவதற்கு ரெடியானார். அதில் ரஜினியுடன் வரும் கேரக்டருக்கு கவுண்டமணி சரியாக இருப்பார் என்று பாக்யராஜ் சொல்ல; முதலில் பாரதிராஜா மறுத்துவிட்டதாகவும்; பிறகு கவுண்டமணியின் காமெடிக்கு வேண்டுமென்றே சிரித்து இயக்குநரை பாக்யராஜ் ஒத்துக்கொள்ள வைத்ததாகவும் ஒரு தகவல் அப்போதிருந்தே சினிமாவில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 16 வயதினிலே திரைப்படம் பாரதிராஜா, ரஜினிகாந்த், கவுண்டமணி என பலரது வாழ்க்கையை புரட்டி போட்டது. படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

கவுண்டமணிக்கு ரெஸ்பான்ஸ்: படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் என நடிப்பு ஜாம்பவான்கள் இருந்தார்கள். எனவே அவர்களை மீறி கவுண்டமணியால் ஸ்கோர் செய்துவிட முடியுமா என்பதுதான் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அப்போது கேள்வி இருந்தது. ஆனால் கவுண்டமணி அசால்ட்டாக ஸ்கோரி செய்தார். அதிலும் இது எப்படி இருக்கு என்று ரஜினி கேட்கும் ஒரு இடத்தில், 'கேவலமா இருக்கு' என்று ஒரு கவுண்ட்டரை கொடுத்தார் கவுண்டமணி. அது இன்றளவும் பலரது ஃபேவரைட் கவுண்ட்டராகவும்; தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் கவுண்ட்டராகவும் மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கு பிறகு கவுண்டமணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. வரிசையாக நடித்துக்கொண்டே இருந்தார்.
பிஸியான நடிகர் கவுண்டமணி: 16 வயதினிலே படத்துக்கு பிறகு அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் தனது காமெடியில் விதவிதமாய் வெரைட்டி காண்பிக்க ஆரம்பித்தார். அப்படிப்பட்ட சமயத்தில்தான் கவுண்டமணியுடன் செந்திலும் இணைந்தார். இரண்டு பேரும் சேர்ந்து செய்த அலப்பறைகளுக்கு எல்லையே இல்லை. வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட தாங்கள் நடிக்கும் படங்களில் காமெடி காட்சிகளாக கொண்டு வந்து அலப்பறையை கூட்டினார்கள். வாழைப்பழ காமெடி, கண்ணை மூடிக்கொண்டே செய்யும் வேலை, இளநீர் காமெடி, லாட்டரி சீட்டு காமெடி என அவர்களது காம்போ தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத காம்போவாக இருக்கிறது. இரண்டு பேரும் பிரிந்து சில படங்களில் நடித்தாலும் சேர்ந்து நடித்ததுபோல் பெரிய ரீச்சை அந்த காமெடிகள் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஒதுங்கிய கவுண்டமணி: தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த கவுண்டமணி ஒருகட்டத்தில் வயோதிகம் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். தனது மனைவி சாந்தி மற்றும் மகள்களுடன் அமைதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். சூழல் இப்படி இருக்க அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்தார். அதன்படி 49 ஓ, ஒத்த ஓட்டு முத்தையா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. அதேசமயம் கவுண்டமணியும், செந்திலும் மீண்டும் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கையும் வைக்க ஆரம்பித்தார்கள். இந்நிலையில் கவுண்டமணி வாழ்க்கையில் சமீபத்தில் பெரிய சோகம் ஒன்று நடந்தேறியது.
மனைவி மரணம்: அதாவது அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி சாந்தி கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சாந்திக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சமீபத்தில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு கவுண்டமணியை பெரிய சோகத்தில் தள்ளியிருக்கிறது. மனைவி மீது தீராத காதலும் பாசமும் கொண்டிருந்த அவர் எப்படி இதிலிருந்து மீளப்போகிறாரோ என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள். சாந்தியின் உயிரிழப்பை கேள்விப்பட்டதும் திரைத்துறையிலிருந்து பெரும்பாலானோர் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி கவுண்டமணிக்கு ஆறுதல் தெரிவித்தார்கள். எப்போதும் சிரித்துக்கொண்டும், பிறரை சிரிக்க வைத்துக்கொண்டும் இருக்கும் அவர் இடிந்துபோய் அமர்ந்திருந்தது பலரையும் கலங்க செய்தது.

சௌந்தர் பேட்டி: இந்நிலையில் பிரபல நடிகரான சுந்தர் கவுண்டமணி குறித்தும், சாந்தியின் மரணம் குறித்தும் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "கவுண்டமணிக்கு அவரது மனைவிதான் எல்லாமே. எனக்கு எல்லாமே அவங்கதான் ப்பா என்று என்னிடமே கவுண்டமணி சொல்லியிருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாகவே சாந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. குடும்பத்தினர் அவரை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். படுத்த படுக்கையாகத்தான் இருந்தார். யாரையும் தொந்தரவு செய்யவில்லை. கவுண்டமணிக்கு சாந்தி உயிரிழந்தது பெரிய இழப்புதான். கவுண்டமணிக்கு இப்போது வெறுமையாகத்தான் இருக்கும்.
விஜய் சொன்ன வார்த்தை: சாந்தியின் உயிரிழப்பை கேட்டதும் நான், சுந்தர்.சி, பூச்சி முருகன், சின்னி ஜெயந்த் என பலரும் வந்து அவருக்கு ஆறுதல் சொன்னோம். விஜய்யும் நேரில் வந்தார். கவுண்டமணியிடம் அவர், 'தைரியமாக இருங்கள்' என்று சொல்லி தேற்றினார். கவுண்டமணி எப்போதுமே எதார்த்தமான ஆள்தான். அவர் பெரிய வணங்காமுடி. யாரிடமும் சென்று கைகள் கட்டியோ, குழைந்துகொண்டோ இருக்கமாட்டார். ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவார். வீட்டிலும் அவர் ரொம்பவே எதார்த்தமாகத்தான் இருப்பார்" என்றார். சௌந்தரின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











