twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்கள் சொந்தப்படம் எடுக்கணும்... அப்போதான் தயாரிப்பாளர்கள் வலி தெரியும்! - நடிகர் ஸ்ரீகாந்த்

    By Shankar
    |

    நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும்; அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி தெரியும் என்று நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார்.

    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வருகிற ஏப்ரல் 2-ல் நடைபெறவுள்ளது. களத்தில் 5 அணிகள் மோதுகின்றன.

    'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி' சார்பில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அந்த அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கள் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வாசித்து அறிமுகப்படுத்தினார்.

    Actor Srikanth urges actors to produce movies

    இந்நிகழ்வில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசும் போது,

    ''இன்னும் எவ்வளவு நாள்தான் மேடைதோறும் பணத்தை இழந்தோம், மரியாதையை இழந்தோம், நிம்மதியை இழந்தோம், கடனாளியாகி விட்டோம், தெருவுக்கு வந்து விட்டோம் என்று தயாரிப்பாளர்களின் வருத்தத்தையும் வலியையும் மட்டும் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம்?

    நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி தெரியும். ஒரு படம் எடுத்துப் பார். அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி என்ன என்பது தெரியும். அந்த வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன், நடிகர்கள் சொந்தப் படம் எடுக்க வேண்டும். இப்போது எல்லா நடிகர்களும் தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். நல்லது வரட்டும்,வந்து உணரட்டும்.

    ஒரு நடிகனாக நடிகர் சங்கத்தில் வாக்களித்தது நல்ல மாற்றம் வரும் என்கிற நம்பிக்கையில்தான். அதை நான் இன்னமும் இழக்கவில்லை. ஆனால் எனக்கு இப்போது ஒரு கேள்வி எழுகிறது. நடிகர்களுக்காகப் பணியாற்றுவீர்கள் என்றுதான் விஷாலுக்கு வாக்களித்தோம். ஆனால் அந்தப் பணியை முடிக்காமல் இன்னொரு வேலையையும் பார்ப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்? எப்படி ஒருவர் முதலாளியாகவும் தொழிலாளியாகவும் நிர்வாகத்துக்கு குரல் எழுப்ப முடியும்? எப்படி இரண்டு பேருக்கும் குரல் எழுப்ப முடியும்?

    இரண்டு இடத்திலும் ஒருவரே இருந்தால் அது ஜனநாயகம் இல்லையே.

    இங்கே இருக்கும் இவர்கள் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாதவர்கள். இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களின் வலி தெரிந்தவர்கள்தான் வரவேண்டும் தங்கள் சுயநலத்துக்கு படமெடுப்பவர்களுக்கு தயாரிப்பாளர்களின் வலி தெரியாது . இந்த அணி நிச்சயம் வெற்றி பெறும்,'' என்றார்.

    Actor Srikanth urges actors to produce movies

    ஆர் ராதாகிருஷ்ணன்

    தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் வேட்பாளரான ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, "இதுவரை கடந்த காலங்களில்அமைதியாக ஆரவாரமின்றி தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இன்றைய சூழ்நிலையில் பரபரப்பாக ஆர்பாட்டமாக நடக்கிறது. இந்தச் சூழலுக்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் யாரையும் எதிரிகளாகப் பார்ப்பது இல்லை.

    கடந்த காலத்தில் பெரிய ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி அவர்கள் காலம் முதல், பிறகு வந்த ரஜினி, கமல்,விஜயகாந்த், சரத்குமார்அவர்கள் காலம் வரை எண்ணற்ற நடிகர்கள் தயாரிப்பாளர்களாக இருந்துள்ளனர். அவர்கள் நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்தபோது கூட எந்தச் சூழலிலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் ஈடுபடுத்திக் கொண்டதில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தில் ஈடுபடுத்திக் கொண்டதில்லை.

    அனைவருமே தயாரிப்பாளர்களைத் தங்கள் முதலாளிகளாகத்தான் பார்த்தார்கள்.இன்று நிலைமை மாறியிருக்கிறது.

    ஒரு அமைப்பில் இருந்து கொண்டு இன்னொரு அமைப்பில் இடையூறு செய்வதை, தலையிடுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது நடிகர் சங்கத் தேர்தல் அல்ல. இது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் .

    தயாரிப்பாளர்களின் 1612 வாக்குகளில் சுமார் 80 முதல் 90 விழுக்காடு சிறுபடத் தயாரிப்பாளர்களின் வாக்குகள்தான். சிறுபடத் தயாரிப்பாளர்கள்தான் சொந்தப் பணத்தில் படமெடுப்பவர்கள். இன்று தேர்தலுக்கு வந்துள்ள நடிகர் சங்கத்தினர், என்றாவது இந்த 80 முதல் 90 விழுக்காடு உள்ள சிறுபடத் தயாரிப்பாளர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.

    சிறுபடத் தயாரிப்பாளர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். அது தேர்தல் நாளில் வெளிச்சத்துக்கு வரும். சங்கத்தில் அதிகார தோரணை மாறவேண்டும் அகந்தைமாறவேண்டும் என்றுதான் சகோதரர்கள் ரித்திஷ், சேரன், ஸ்ரீகாந்த் போன்றவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக சங்கம் சிறு தயாரிப்பாளர்களை சிறிதும் மதிக்காத சங்கமாக இருந்தது. தயாரிப்பாளர்களின் குறைகளை பிரச்சினைகளை அரசிடம் எடுத்துக் கொண்டு செல்லவே இல்லை," என்றார்.

    கே ராஜன்

    தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது, ''இது சுயநலமில்லாத அணி. ஒரு தயாரிப்பாளருக்கு படபூஜையன்று மட்டும்தான் மரியாதை. படப்பிடிப்பு தொடங்கியது முதல் தலைக்குனிவுதான் தொடரும். ஒரு நாள் சம்பளம் தாமதமானால் கூட 'உன்னை யாருய்யா படமெடுக்கச் சொன்னா?' என்பான் ஒரு தொழிலாளி. 10 ஆயிரம் ரூபாயில் ஒரு பெட்டிக் கடை வைத்தால் கூட நஷ்டம் என அதை விட்டுவிட்டால் 5ஆயிரம் ரூபாயாவது தேறும். சினிமாவில் அதுவும் தேறாது. அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக எந்த உதவியும் கிடைக்க வில்லை.இவர்கள் பதவிக்கு வந்தால் எப்போதும் உதவ நாலு பேர் இருப்பார்கள்,''என்றார்.

    ஜேஎஸ்கே

    தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' என்கிற ஜே.சதிஷ்குமார் பேசும்போது, "இங்கு யாருக்கும் சுயநலமில்லை. இங்கு உள்ளவர்கள் வலியும் வேதனையும் அனுபவித்தவர்கள். விஷால் எங்களுக்கு எதிரி இல்லை. தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இடையே ஒரு பிரச்சினை என்று வந்தால் அவர் நடிகர்களுக்கு சாதகமாகப் பேசுவாரா? தயாரிப்பாளர்களுக்குச் சாதகமாகப் பேசுவாரா? அதனால்தான் நண்பர்கள் சேரனும் ரித்தீஷீம் எங்களை ஆதரிக்கிறார்கள். எங்கள் அணி பற்றி இப்போதே விரிவாகப் பேச விரும்பவில்லை. வென்றுவிட்டு செய்து காட்டுவோம்,'' என்றார்.

    ஜேகே ரித்தீஷ்

    நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பேசுகையில், ''இதுதான் தகுதியான தலைமை என்று முடிவுக்கு வந்தபின்தான் நான் இங்கு வந்தேன். மற்றவர்களுக்கு உதவுகிறவர்கள் இங்குதான் இருக்கிறார்கள். தயாரிப்பாளரின் வேதனைகளைப் பணமாக்கிக் கொள்ள நினைப்பவர்கள் வருவதை விட போராளிக் குணம் உள்ளவர்கள் வர வேண்டும் . அப்படி மற்றவர்களுக்காக உதவுகிறவர்கள் இங்கு இருக்கிறார்கள்.

    நண்பர் விஷால் நடிகர் சங்கத்தில் சொன்னதைக் காப்பாற்ற வேண்டும். 'அகல உழுவதைவிட ஆழ உழுவதுமேல் 'என்பார்கள். அவருக்குள்ள வேலையை அவர் முழுதாகச் செய்யட்டும்.

    'ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால்' அவருக்குத் தேவையா? அங்கு அவர் சங்கத்துக்கு வந்து ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது. ஒன்றுமே நடக்கவில்லை. எல்லாவற்றிலும் நானே வந்து தலைவராக நிற்பேன் என்றால் மக்கள் சிரிப்பார்கள் அல்லவா?

    எங்கள் அணி சார்பில் சனிக்கிழமை காலையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு மணிகண்டன்அவர்களைச் சந்தித்தோம். கேபிள்டிவி நடத்துபவர்கள் படம் வெளிவந்து 2 வது நாள் 3வது நாள் கேபிள்டிவி யில் போடுவதை நிறுத்தக் கேட்டுக் கோண்டோம். எந்த டிவியில் போட்டாலும் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

    அடுத்து மாண்புமிகுமுதல்வர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது 400 படங்கள் மானியம் கிடைக்காமல் இருப்பதைக் கோரிக்கையாக வைத்தோம். திங்கள் கிழமை வரச்சொல்லி இருக்கிறார். மானியத்தை இந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்கக் கேட்டிருக்கிறோம்.

    சங்கத்துக்கு வேலை செய்யத் தகுதியான ஆட்கள் வந்தால்தான் வேலை நடக்கும் . இந்த அணியினர் அப்படிப் பட்டவர்கள். இந்த அணி இப்போதே செயல்பட ஆரம்பித்து விட்டது,'' என்றார்.

    நிகழ்ச்சியில் 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி' வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    English summary
    Actor Srikanth has urged the co actors to produce a movie to know the pains of a producer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X