ஜன நாயகன் மாபெரும் வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை... திருவண்ணாமலை கோயிலில்கும்பிட்ட நடிகர் ஸ்ரீமன்!
சென்னை: தமிழ் திரையுலகமே பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் மாஸ் நடிகர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வெற்றி பெற வேண்டி, அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தி உள்ளார்.
ஜன நாயகன்: கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இந்தப் படத்தில், கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது. அனிருத்தின் வெறித்தனமான இசையில் பாடல்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து விட்டன.

நண்பனுக்காக பிரார்த்தனை: நாளை திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், நடிகர் விஜயின் திரையுலகப் பயணத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீண்ட கால நெருங்கிய நண்பராக இருக்கும் நடிகர் ஸ்ரீமன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். திரையரங்குகளில் 'ஜன நாயகன்' திருவிழா போலக் கொண்டாடப்பட உள்ள சூழலில், படம் எந்த தடங்கலும் இல்லாமல் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என வேண்டி அவர் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளார். இந்தச் செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
ரூ 40 கோடி வசூல்: நாளை தமிழகம் முழுவதும் 1000-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாக உள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில், இதுவரை டிக்கெட் முன்பதிவில் மட்டும் ரூ.40 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.15 கோடியையும், உலக அளவில் ரூ.30 கோடியையும் முன்பதிவில் மட்டும் படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications