நமக்கே எல்லாம் வேணும்னு நினைக்காதீங்க.. பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி குறித்து ஸ்ரீமன் வேண்டுகோள்
சென்னை: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கொண்டு ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கடல் வழியே பயணிக்கும் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் அனுமதிக்க ஈரான் மறுக்கிறது. மீறி வரும் கப்பல்களை ஏவுகணைகளை அனுப்பி சுட்டு வீழ்த்துகிறது. இப்படி இருக்கையில் இந்தியா போன்ற 140 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தட்டுப்பாடு என்று கிளம்பிய வதந்தியை நம்பி மக்கள் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க போட்டி போட்டுக் கொண்டு காத்திருந்தனர். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீமன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, " பெட்ரோல் பங்கிற்கு சென்றிருந்தேன் அரைமணி நேர காத்திருப்புக்கு பின்னர் தான் பெட்ரோல் போட முடிந்தது. இத்தனைக்கும் பைக் மற்றும் காருக்கு என்று தனித்தனியே வழி எல்லாம் உருவாக்கி வைத்திருந்தார்கள். நாளை முதல் எதுவுமே கிடைக்காது, இன்றே எல்லாம் நிரப்பி வைத்து விட வேண்டும், அதில் தான் அந்த வாகனம் வாழ்க்கை முழுவதும் ஓடப்போகிறது என்பது போல மக்கள் கடன் வாங்கிக் கொண்டு வந்தெல்லாம் பெட்ரோல் நிரப்பினார்கள்.

பகிர்ந்து வாழவேண்டும்: நான் பெட்ரோல் அடித்த கொஞ்ச நேரத்தில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது என்று போர்ட் வைத்துவிட்டார்கள். இதனால் பலருக்கும் பெட்ரோல் கிடைக்கவில்லை. நாம் ஏன் பகிர்ந்து வாழக் கூடாது. நம்மிடம் வசதி உள்ளது என்பதற்காக நாம் இப்படி பெட்ரோல் அதிகம் அடிக்க வேண்டுமா? சில பேரால் இரண்டு லிட்டர் பெட்ரோல் தான் போட முடியும், அவர்களும் வெளியே செல்ல வேண்டும் அல்லவா? அவர்களுக்கும் குடும்பம் உள்ளது தானே? எந்த பிரச்னை வந்தாலும் சுயநலமாக இருக்க வேண்டாம், பொது நலமாக இருக்க பாருங்கள்.
ஜனத்தொகை: நம்மூரில் ஜனத்தொகை அதிகம், எனவே நீங்களே எல்லாவற்றையும் நிரப்ப வேண்டும் என்று நினைக்காதீர்கள். மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினையுங்கள். எல்லாம் நமக்கே வந்துவிட வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது தவறு. இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் கர்ப்பிணிப் பெண்ணை வைத்துக் கொண்டு அவரது கணவர் தள்ளிக் கொண்டு செல்கிறார், அதைப் பார்த்ததும் எனக்கு பரிதாபம் தான் ஏற்பட்டது. நம்மக்கள் மத்தியில் வன்மம் அதிகரித்துவிட்டது. சம்மந்தமில்லாத கமெண்ட்களும் தவறான கமெண்ட்களும் தான் அதிகம் வருகிறது. நான் இப்போது சொன்ன விஷயத்தில் 200 சதவீதம் அரசியல் இல்லை.
ஒரு வாழ்க்கை: என்னாலும் எனது காருக்கு ஃபுல் டேங்க் பெட்ரோல் போட்டு இருக்க முடியும். ஆனால் நான் பாதி தான் போட்டேன். நிறைய பேரைச் சென்று பார்ப்பதை நிறுத்திவிட்டு, போனிலேயே பேசிக் கொள்கிறேன். பகிர்ந்தளித்து வாழ்ந்தால் தான் இந்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தான் நமக்குத் தேவை" என்று நிதானமான அதே நேரத்தில் எதார்த்தமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இவரது இந்த கருத்துக்கள் இன்றைய சூழலுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











