அப்பா போல் நுழைந்திருக்கிறாய்.. சீக்கிரம் அடித்து ஆடுவார்.. விஜய் மகனை வாழ்த்திய நடிகர்
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி அதற்கு படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை; எந்த மூவ்மெண்ட்டும் இல்லை. இதனால் அந்தப் படம் என்ன ஆனது என்பது குறித்து ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது. சூழல் இப்படி இருக்க ஜேசன் சஞ்சய்யை நடிகர் ஸ்ரீமன் வாழ்த்தி ட்வீட் செய்திருக்கிறார்.
கோலிவுட்டின் டாப் நடிகர் விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 69ஆவது படமாக உருவாகும் அதுதான் தனது கடைசி படமாக இருக்கும் என்றும் அவர் அறிவித்துவிட்டார். அந்தப் படத்தை முடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

விஜய்யின் வாரிசு: விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருப்பது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவுக்கு வந்திருப்பதுதான். ஆனால் தனது தந்தை போல் நடிகராக இல்லாமல் தாத்தா போல் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்திருக்கும் ஜேசன் ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் என்ட்ரி: ஜேசன் சஞ்சய்க்கு 21 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் அவர் படம் இயக்க வருவது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அதிலும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகாவின் பேனரில் அவர் தனது முதல் படத்தை இயக்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதற்கிடையே ஜேசன் சஞ்சய் இந்த வயதிலேயே சினிமா இயக்குவது விஜய்க்கு பிடிக்கவில்லை என்றும்; அதனால்தான் இந்த விஷயத்தில் அவர் மௌனம் காத்துவருகிறார் என்றும் கிசுகிசு ஓடியது கவனிக்கத்தக்கது.
கவினுடன் பேச்சுவார்த்தை: ஜேசன் சஞ்சய் இயக்கப்போகிறார் என்றதும் யார் ஹீரோ என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. முதலில் விஜய் சேதுபதி, விக்ரம் மகன் துருவ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் இப்போது ரைசிங் ஸ்டாராக இருக்கும் கவினிடம் படம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதனை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருந்தார். ஆனால் அது பேச்சுவார்த்தையோடு நின்று போனது. இதற்கிடையே ஜேசனின் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் தயங்குவதாகவும் ஒரு தகவல் வட்டமடிக்கிறது.
வாழ்த்திய ஸ்ரீமன்: இந்நிலையில் நடிகரும் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ஸ்ரீமன் தனது எக்ஸ் தளத்தில் ஜேசனை வாழ்த்தி பதிவு போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "அப்பாவும் உனது வயதில்தான் சினிமாவுக்குள் நுழைந்தார். ஜேசன் சஞ்சய் நன்று பயிற்சி எடுத்து தன்னை ட்யூன் செய்திருக்கிறார். சீக்கிரம் அடித்து ஆடுவார். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் அன்பே" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











