Kichcha Sudeep: சுதீப்பை இயக்கும் டைரக்டர் சேரன்.. என்னது 100 கோடி பட்ஜெட்டா?
சென்னை: நடிகர் சுதீப் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தமிழில் இவரது நடிப்பில் வெளியான நான் ஈ உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை சுதீப் கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் சேரன் இயக்கத்தில் இணையும் கிச்சா சுதீப்: கன்னட நடிகர் சுதீப் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், கதை எழுத்தாளர், தொகுப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர். பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் சுதீப், நான் ஈ படம் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். இந்தப் படத்தில் ஈயுடன் மல்லுக்கட்டும் இவரது கேரக்டர் வில்லனாக இருந்தபோதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து தமிழில் சில படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.
கன்னடம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் சுதீப் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இவரது பட அறிவிப்புகள், டீசர் என அடுத்தடுத்து வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. தாணு தயாரிப்பில் சுதீப் நடித்துவரும் படத்தின் டைட்டில் டீசர், சுதீப் பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ளது. மாக்ஸ் என இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசரை வெளியிட்டுள்ள தாணு, சுதீப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.
பான் இந்தியா ஸ்டாராக உள்ள சுதீப், மகதீரா, பாகுபலி என அடுத்தடுத்த மாஸ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறப்பான நடிகராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் சுதீப். இவரது ஸ்பர்ஷா, ஹுச்சா, சுவாதி முத்து என அடுத்தடுத்த படங்களுக்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். அதிகமாக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற பெயரும் இவருக்குண்டு.

இதனிடையே இன்றைய தினம் இவரது பிறந்தநாளையொட்டி கிச்சா 46 படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது. மிகவும் மிரட்டலாக அந்த டீசர் காணப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்சிற்காக தமிழ் படத்திலும் கமிட்டாகியுள்ளார் சுதீப். இந்தப் படத்தை இயக்குநர் சேரன் இயக்கவுள்ளதாகவும் பிரம்மாண்டமான அளவில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்போதும் பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து எளிமையான இயல்பான ஃபில் குட் படங்களை இயக்கிவந்த இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் இந்தப் படத்தின்மூலம் கமர்ஷியல் இயக்குநர் அவதாரத்தை எடுக்கவுள்ளதாகவும் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய கதை மூலம் சமீபத்தில் சுதீப்பை இம்ப்ரஸ் செய்துள்ள சேரன், காலத்திற்கு தகுந்தாற்போல தன்னுடைய இயக்கத்திலும் இந்தப் படத்தின்மூலம் மாற்றங்களை கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் குறித்த அறிவிப்பும் இன்றைய தினம் சுதீப் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











