Actor Sudhakar: அந்தரிகி நமஸ்காரம்... நான் நல்லாதான்யா இருக்கேன்... 80ஸ் ஹீரோ சுதாகர் கதறல்
ஹைதராபாத்: கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் நடிகர் சரத்பாபு காலமானார்.
முன்னதாக அவர் உயிரிழந்துவிட்டதாக சில வாரங்களுக்கு முன்னர் வதந்தி பரவியது.
அதேபோல், தற்போதும் பிரபல தெலுங்கு நடிகர் சுதாகர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து அவர் வீடியோ வெளியிட்டு தனது உடல்நிலை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுதாகர்
இந்தாண்டு தொடக்கம் முதலே திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர்கள் மனோபாலா, சரத்பாபு ஆகியோர் உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரம் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவியது.
அதன்பின்னர் சரத்பாபு உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்திருந்தனர். இருப்பினும் சில தினங்களுக்கு முன்னர் சரத்பாபு நிஜமாகவே உயிரிழந்தார். அதேபோல் மனோபாலா உயிரிழப்பு குறித்தும் பலமுறை வதந்திகள் வெளியாகியுள்ளன. இந்த வரிசையில் இன்னொரு பிரபல நடிகரான சுதாகரும் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் காட்டுத் தீப் போல பரவின.
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சுதாகர். இதில் தான் நடிகை ராதிகாவும் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கல்லுக்குள் ஈரம், சுவரில்லாத சித்திரங்கள், நிறம் மாறாத பூக்கள், மாந்தோப்பு கிளியே, எங்க ஊரு ராசாத்தி, பொண்ணு ஊருக்கு புதுசு, தைப்பொங்கல் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அதிசயப் பிறவி படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான ஹேர்ஸ்டைல், வசீகரமான தோற்றம் என 80களில் கோலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக வலம் வந்தார் சுதாகர். அதன்பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற அவர், தற்போது காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், சுதாகர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் பரவின.

இதனையடுத்து பலரும் சுதாகர் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விசாரித்து வந்தனர். இதனால், கடுப்பான நடிகர் சுதாகர் அவரே வீடியோ வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். அதில், அந்தரிகி நமஸ்காரம் எனத் தொடங்கும் சுதாகர், "நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். தயவுசெய்து தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். எதையும் உண்மை தெரியாமல் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம்" என பேசியுள்ளார். அவரது இந்த விளக்கம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











