லாக்டவுனால் வீட்டில் வறுமை.. மீன் வியாபாரியாக மாறிய பிரபல நடிகர்.. கொரோனா முடிந்தும் தொடர்வாராம்!
கொச்சி: கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட வறுமை காரணமாக நடிகர் ஒருவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ், உலகையே கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,04,641 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை 3,59,860 பேர் குணமடைந்துள்ளனர். 2,26,947 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 17,834 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

ஊரடங்கு காரணமாக
கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பல தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு சினிமா தொழிலாளர்களும் நடிகர், நடிகைகளும் விதிவிலக்கல்ல. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வரும் நடிகர்கள், கொரோனாவால் தங்கள் தொழிலை மாற்றியுள்ளனர்.

மீன் வியாபாரம்
இந்தி பட நடிகர் ஒருவர், டெல்லியில் பழங்கள் விற்கிறார். மராத்தி நடிகர்கள், காய்கறிகள் விற்கின்றனர். ஒருவர் கருவாடு விற்று வருகிறார். இதை செய்வதில் தங்களுக்கு எந்த வருத்தமோ, வெட்கமோ இல்லை என்றும் நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கிறோம் என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் மலையாள நடிகர் ஒருவர், கொரோனாவால் ஏற்பட்ட வறுமை காரணமாக, மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

மிமிக்ரி கலைஞர்
அவர், நடிகர் சுதீஷ் அன்சேரி. இவர் பிரகாஷ் குஞ்சன் இயக்கிய தனஹா படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். சுமார் பத்து, பதினைந்து படங்களில் நடித்துள்ள இவர், சிறந்த மிமிக்ரி கலைஞர். தமிழிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். கொரோனாவால் பள்ளிகள் திறக்கவில்லை.

தொடர்வேன்
சினிமாவுக்கும் வாய்ப்பில்லை இல்லை என்பதால், வறுமையை விரட்ட மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருச்சூர் படவரோடு மையத்தில் இவர் இதை செய்து வருகிறார். ஏற்கனவே அவர் இங்கு வேலை பார்த்திருக்கிறாராம். லாக்டவுன் முடிந்து பள்ளிகளும் படப்பிடிப்பும் தொடங்கினாலும் இந்த வியாபாரத்தைத் தொடர்வேன் என்கிறார் சுதீஷ் அன்சேரி.


Click it and Unblock the Notifications