மண்ணாப்போச்சு.. கடைசி வரை நிறைவேறாத சூப்பர் குட் சுப்பிரமணியின் ஆசை.. போராட்டத்தோடு மூச்சு நின்றது!
சென்னை: பரியேறும் பெருமாள், ஜெய் பீம், பிசாசு, ரஜினி முருகன் போன்ற படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்த நடிகர் தான் சூப்பர் குட் சுப்பிரமணி. புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயக்குநராகிவிட வேண்டும் என்ற கனவோடு போராடிக்கொண்டிருந்த இவரின் ஆசை கடைசி வரை நிறைவேறாமலே அவரின் உயிர் பிரிந்துள்ளது.
குணசித்திரம் மற்றும் காமெடி நடிகரான இவர், இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். கலைஞர் கருணாநிதியின் பெண் சிங்கம், சிட்டிசன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். அதே போல, பெரிய இயக்குனர்கள், பெரிய ஹீரோக்கள் என அனைவரிடத்தில் வேலைப் பார்த்து இருக்கிறார். இயக்குராக வேண்டும் என்ற கனவோடு இருந்த இவருக்கு பட வாய்ப்பு வராததால் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும் போன்ற படத்தில் நல்ல ரோலில் நடித்து பெயர் எடுத்தார். குறிப்பாக சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படத்தில் மோசமான போலீஸாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

சூப்பர் குட் சுப்பிரமணி: தொடர்ந்து பல படத்தில் நடித்து வந்த இவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் பரிசோதித்த போது புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதற்காக ராஜுவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், தனக்கு இருக்கும் புற்று நோய் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். திடீரென, நோய் தீவிரமானதை அடுத்து, பண உதவி தேவைப்பட்டதால், முதலமைச்சருக்கு அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அதன் பின் ஒரு சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது. இவரின் மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கடைசி ஆசை: சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கும் மேலாக சூப்பர் குட் சுப்பிரமணி போராடி இருக்கிறார். அப்போது தான் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பெரிய பட்ஜெட்டில் தெலுங்கு மாஸ் நடிகர் ராஜசேகரை ஹீரோவாக வைத்து படம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், படம் தொடங்கிய வேகத்தில் சில பிரச்சனைகளால் நின்று போனது. அதன் பின், பார்த்திபனை வைத்து ஒரு படம் இயக்கி பேச்சுவார்த்தை நடந்து, பட வேலையும் தொடங்கப்பட்ட பின், படம் பாதியிலேயே நின்று போனது. அதன் பின்னும் முயற்றியை விடாமல் தொடர்ந்து தயாரிப்பாளர்களை சந்தித்து கதைகளை சொல்லி, தியாகராஜனை வைத்து படத்தை இயக்க இருந்த நிலையில், அந்த படமும் நின்று போனது. 3 முறை வாய்ப்பு வந்தும் அது நடக்காமல் போய் உள்ளது. இதனால், குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்பதற்காக நடிகராக தனக்கு வந்த ரோலில் சிறப்பாக நடித்தார், எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற ஆசையோடு இருந்த சூப்பிரமணியின் கனவு கடைசி வரை நிறைவேறவே இல்லை.


Click it and Unblock the Notifications











