ரெட்ரோ பட வெற்றி: விக்ரம் பாணியில் பிரியாணி விருந்து வைத்த ரோலக்ஸ்!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஷ்ரேயா சரண் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் டிரெண்டானது. மே 1ந் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. ரெட்ரோ பட வெற்றியை நடிகர் சூர்யா படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து கொண்டாடி உள்ளார்.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ரெட்ரோ படத்தில் சூர்யா வழக்கம் போல தனது மொத்த திறமையையும் காட்டி உள்ளார். ஜோஜு ஜார்ஜ் மனைவி தனக்கு குழந்தை இல்லாததால், சூர்யாவை தத்து எடுத்து வளர்ந்து வருகிறார். இதில், ஜோஜு ஜார்ஜுக்கு உடன்பாடு இல்லை, இருந்தாலும், மனைவி குழந்தை இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுவதால், அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். ஆனால், பல நேரத்தில் சூர்யாவை அனாதை என்றும், அப்பா என்று என்னை கூப்பிடாதே என கண்டித்து இருக்கிறார் ஜார்ஜ். ஆனால், எதிரிகள் ஜோஜு ஜார்ஜை தீர்த்துக்கட்ட போட்ட சதியை, தெரிந்து கொண்ட சூர்யா, அதை முறியடித்து அவரை காப்பாற்றுகிறார். அதன் பின், ஜார்ஜுக்கு சூர்யா மீது பாசம் ஏற்பட்டு, சூர்யாவை தனது மகனாக ஏற்றுக்கொள்கிறார்.

ரெட்ரோ: அந்த ஊரில் பெரிய ரௌடியாக, கொலை, கொள்ளை, மோசடி என பல வேலைகளை செய்து வருகிறார் ஜோஜு ஜார்ஜ். இந்த நேரத்தில் தான், அப்பா ஜோஜு ஜார்ஜை ஏமாற்றி ஒரு மோசடி வேலை செய்துவிடுகிறார் சூர்யா. இதனால், ஏற்பட்ட சண்டையில் சூர்யா, ஜோஜு ஜார்ஜின் கையை வெட்டி விட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். 7 ஆண்டுகழித்து சிறையில் இருந்து வெளியே வந்த சூர்யா, தனது காதலியான, பூஜா ஹெக்டேவை தேடி செல்லும் போது, அவள் அந்தமானில் இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து, சூர்யா அந்தமான் செல்கிறார். அப்போது தான், ஒரு கொடிய அரக்கனிடம் ஜோஜு ஜார்ஜ் சிக்கி அடிமையாக இருப்பது தெரியவருகிறது. அதில் இருந்து ஜோஜு ஜார்ஜை எப்படி காப்பாற்றினார்... பூஜா ஹெக்டேவை திருமணம் செய்து கொண்டாரா.. இல்லையா என்பது தான் ரெட்ரோ படத்தின் மீதிக் கதை.
பிரியாணி விருந்து: படம் பார்த்த பயில்வான் ரங்கநாதன் படத்திற்கு 100க்கு 57 மதிப்பெண் கொடுத்து இருந்தார். மேலும், இந்த படத்தின் மூலம் சூர்யா ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் என கூறியிருந்தார். அதே போல, ரெட்ரோ படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்து வந்த நிலையில், சூர்யாவை இந்த படம் காப்பாற்றியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை ஜெயிக்க வைத்து விட்டார் என இணையத்தில் சூர்யாவின் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனால், மகிழ்ச்சியில் இருக்கும் சூர்யா, படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து, மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜின் தலைமையில் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. தற்போது ரெட்ரோ படத்தின் வெற்றிக்கும் பிரியாணி விருந்து வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











