Actor Suriya: ஒரு கண்ணில் துணிச்சல்.. மறுகண்ணில் கருணை.. விஜயகாந்திற்கு சூர்யா அஞ்சலி!
சென்னை: நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்திய அளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவிற்கு தொடர்ந்து ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவர் விஜயகாந்த். இருந்தபோதிலும் அவரது தேமுதிக கட்சி உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு நல்ல உடல்நிலையில் இருந்தபோது செய்த பணிகள் காரணமாக அமைந்துள்ளன.
நடிப்பிலும் பல வித்தியாசங்களை காட்டியவர் விஜயகாந்த். அழுத்தமான நடிப்பிலும் இவரை சிறப்பாக பார்க்க முடியும். அதிரடியிலும் பின்னி பெடலெடுப்பார். தொடர்ந்து சூர்யா, விஜய் போன்றவர்களை ஆரம்ப காலக்கட்டங்களை தன்னுடன் இணைத்து நடிக்க வைத்து அவர்களுக்கு சிறப்பான அடையாளத்தை கொடுத்தவர் விஜயகாந்த். விஜய்யுடன் செந்தூரப்பாண்டி மற்றும் சூர்யாவுடன் பெரியண்ணா படத்தில் இணைந்து நடித்திருந்தார் விஜயகாந்த். இந்தப் படங்கள் விஜய், சூர்யாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயகாந்த்: நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அரசியல் கட்சி தலைவராகவும் பன்முகங்களுடன் சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த். வில்லனாகவே சினிமாவில் இவரது அறிமுகம் இருந்தது. விஜயகாந்திற்கு சிறப்பான என்ட்ரியை தமிழில் கொடுத்தப்படம் என்றால் அது தூரத்து இடி முழக்கம். இந்தப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட அதிரடி படங்களில் தன்னுடைய மாஸான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், இன்றைய தினம் நம்மிடம் இல்லை என்பதை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது.
உடல்நல பிரச்சினைகள்: நடிப்பு, அரசியல் என ஓடிஓடி செயல்பட்ட விஜயகாந்த் நீரிழிவு, சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். அவரது இழப்பு இந்திய அரசியலிலும் தமிழக சினிமாவிலும் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தன்னுடைய அலுவலகத்திற்கு வந்தவர்கள் யாரும் பசியோடு வெளியில் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் விஜயகாந்த்.
சூர்யா இரங்கல்: இந்நிலையில் அவருடன் பெரியண்ணா படத்தில் இணைந்து நடித்த நடிகர் சூர்யா, தன்னுடைய இரங்கலை சமூக வலைதளப்பக்கத்தில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் ஒரு கண்ணில் துணிச்சலையும் மறு கண்ணில் கருணையையும் கொண்டு வாழ்ந்த அபூர்வ கலைஞன் அவர் என்று சூர்யா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்ணன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பது மனதிற்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடைக்கோடி மக்கள் வரை அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் விஜயகாந்த் செய்ததையும் சூர்யா சுட்டிக் காட்டியுள்ளார்.

வீடியோ மூலம் சூர்யா வருத்தம்: விஜயகாந்த், புரட்சிக்கலைஞனாகவும் கேப்டனாகவும் நம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் என்றும் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள நடிகர் சூர்யா அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ளார். தொடர்ந்து இந்த வீடியோவின் கேப்ஷனிலும் விஜயகாந்த் குறித்த சில நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார். விஜயகாந்துடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











