Actor Suriya: காக்க காக்க படத்தின் நினைவுகள் மறக்க முடியாதவை.. டேனியல் பாலாஜி குறித்து சூர்யா வேதனை!
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் இன்றைய தினம் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் காக்க காக்க படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவும் தன்னுடைய அஞ்சலியை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரியாக டேனியல் பாலாஜி நடித்திருந்தார்.
இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கோலிவுட்டில் கொடுத்தது. தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார், அவரது இறப்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரியது என்று அனைவரும் தங்களது வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு ரகுவரனாக தன்னுடைய கேரக்டர்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த டேனியல் பாலாஜியின் மறைவு கோலிவுட்ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது நடிப்பின்மூலம் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் படங்களை வெற்றிப்படமாக்கிய டேனியல் பாலாஜி இன்னும் கொண்டாடப்பட்டிக்க வேண்டும் என்ற ஆதங்கமும் தற்போது வெளிப்பட்டு வருகிறது.

நடிகர் டேனியல் பாலாஜி: நடிகர் டேனியல் பாலாஜி சீரியலில் இருந்து சினிமாவில் சிறிய கேரக்டர்களில் நடிக்கத் துவங்கி தொடர்ந்து மிரட்டலான வில்லனாக தன்னை தமிழ் சினிமாவில் பதிவு செய்தவர். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகர் முரளியின் தம்பியான டேனியல் பாலாஜி, தொடர்ந்து அவரது சிபாரிசு இல்லாமலேயே அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் அவர் தன்னுடைய படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.
சீரியலில் என்ட்ரி: சித்தி சீரியலில் ராதிகா சரத்குமாருடன் இணைந்து நடித்த டேனியல் பாலாஜி, அந்த சீரியல் கொடுத்த பிரபலத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறிய கேரக்டர்களில் நடித்து அதன் மூலம் தொடர்ந்து சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் சிறப்பான கேரட்ரில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்திலேயே கமல்ஹாசனுடன் இணைந்து வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக அதகளம் செய்திருந்தார்.

மாரடைப்பால் மரணம்: நேற்றிரவு மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி தன்னுடைய 48வது வயதில் உயிரிழந்த சூழலில் அவரது மரணம் கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது உடல் புரசைவாக்கத்தில் இருந்த அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னதாக அவர் கண் தானம் செய்த நிலையில் அவரது கண்களும் தானமாக கொடுக்கப்பட்டது. அவர் தன்னுடைய கண்கள் மூலம் இந்த உலகத்தில் வாழ்வார் என்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் டேனியல் பாலாஜிக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
சூர்யா இரங்கல்: அவருடன் இணைந்து காக்க காக்க படத்தில் நடித்த அனுபவத்தை எந்த காலத்திலும் மறக்க முடியாது என்று சூர்யா தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தன்னுடைய இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துள்ள சூர்யா, டேனியல் பாலாஜியின் மறைவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஒரு ஷாட் சிறப்பாக வருவதற்காக தன்னை எப்போதும் அவர் வற்புறுத்தி வந்ததாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











