அவங்களும் பார்க்க வேண்டாமா? மலைவாழ் மக்களுக்கு ஜெய்பீம் படத்தை திரையிட்டு காட்டிய சூர்யா ரசிகர்கள்!
சென்னை: ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகி உலகம் முழுக்க பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
இருளர் இனத்தை சேர்ந்த மக்கள் படும் துயரத்தையும், அடிமட்டத்தில் இருக்கும் பழங்குடிகளை ஆதிக்க வர்க்கம் நசுக்குவதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை மலைவாழ் மக்களும் பார்க்க வேண்டாமா?
அவர்களும் இந்த படத்தை பார்க்க பக்காவான வேலையை சூர்யா ரசிகர்கள் செய்துள்ளனர்.

பழங்குடியினரின் உரிமைக் குரல்
பழங்குடி மக்களுக்கான உரிமைக் குரலாக ஜெய்பீம் திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே ஜெயிலில் இருந்து வெளியே வரும் பழங்குடி மக்களை மட்டும் மீண்டும் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ள போலீசார் போட்டா போட்டி போடும் அந்த ஒரு காட்சி இந்த படம் அனைத்து மக்களும் சமம் என பார்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இயக்குநருக்கு பாராட்டு
பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறிய பலர் இது போன்ற சமூக சிந்தனை உடைய படங்களை இயக்கி வருகின்றனர். பத்திரிகையாளராக பணியாற்றிய தா.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் திரைப்படம் எடுத்துக் கொண்ட கதை மற்றும் காட்சிப்படுத்திய விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மலைவாழ் மக்களுக்கு திரையிடல்
ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள நிலையில், மலைவாழ் மக்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என எண்ணிய தேனி மாவட்ட சூர்யா ரசிகர்கள் சின்னமனூரில் உள்ள மார்க்கயன்கோட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பிரத்யேகமாக சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தை திரையிட்டு காட்டி உள்ளனர்.

ஒரு சிறிய மாற்றம்
ஜெய்பீம் படத்தின் தாக்கம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. லாக்கப் டெத் மீதான பார்வையையும் பழங்குடி மக்களை இழிவாக பார்க்கக் கூடாது என்கிற எண்ணத்தையும் விதைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

மளிகை பொருட்கள்
மேலும், ஜெய்பீம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பழனிக்கு அருகில் உள்ள பொந்து புளி கிராமத்தில் உள்ள இருளர் மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்க்கு தேவையான மளிகை பொருட்களை திண்டுக்கல் மேற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக வழங்கி உள்ளனர்.
Recommended Video

சூர்யா நன்றி
பழனி, சிவகாசி என பல மாவட்டங்களிலும் உள்ள சூர்யா ரசிகர்கள் ஜெய்பீம் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், பழங்குடி மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருவதை பார்த்து சந்தோஷப்பட்ட சூர்யா இரு கை கூப்பி நிற்கும் எமோஜியை போட்டு நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











