ரஜினிகாந்தின் வேட்டையன்.. படத்துல ரெண்டும் இருக்கும்.. நடிகர் சூர்யா பாராட்டு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் சிறப்பாக ரிலீசாகியுள்ளது. தன்னுடைய முதல் படமான ஜெய் பீம் மூலம் சமூக அக்கறையை வெளிப்படுத்தி சிறப்பான இயக்குனராக தன்னை வெளிப்படுத்திய டிஜே ஞானவேல், இந்த படத்தில் கமர்சியல் பக்கத்தையும் சிறப்பாக கொடுத்துள்ளார்.
முதல் படத்தில் டிஜே ஞானவேலுடன் கூட்டணி அமைத்த நடிகர் சூர்யா தற்போது வேட்டையன் படத்திற்கு தன்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தனது எக்ஸ் தள பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். குறிப்பாக தன்னுடைய ஃபேவரிட் இயக்குநர் டிஜே ஞானவேலுக்கு அவர் தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வேட்டையன் படம்: இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய பாராட்டுக்களையும் சிறப்பான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் முன்னதாக ஜெய்பீம் என்ற சமூக அக்கறையை வெளிப்படுத்தும் படத்தை கொடுத்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யா லீட் கேரக்டரில் வழக்கறிஞராக நடித்திருந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் பெற்றுத்தரும் கேரக்டரில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொண்டாட செய்தது.
டிஜே ஞானவேலுக்கு கண்டிஷன் போட்ட ரஜினி: இந்த படத்தை தொடர்ந்து இதே போன்றதொரு சமூக கருத்தை மையமாகக் கொண்ட படத்தை டிஜே ஞானவேல் கையிலெடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் கூட்டணி அமைத்தார். முன்னதாக ரஜினிகாந்திடம் டிஜே ஞானவேல் கதை சொன்ன நிலையில், கதையை கேட்ட ரஜினிகாந்த், இது போன்ற கருத்து படங்கள் தனக்கு செட்டாகாது என்றும் தன்னுடைய ரசிகர்களை இம்ப்ரஸ் செய்யும் வகையில் படத்தை எடுக்க வேண்டும் என்றும் முதல் கண்டிஷன் போட்டதாக முன்னதாக ரஜினிகாந்தே தெரிவித்திருந்தார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்: இதையடுத்து தான் எடுத்துக் கொண்ட கதையையே கமர்சியல் வடிவத்துடன் மாற்றி வேட்டையன் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். இந்த படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கருத்துக்களை அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. படத்தை பிரபலங்கள், விமர்சகர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சிறப்பு காட்சியுடன் தமிழகத்தில் வேட்டையன் படம் ரிலீசாகியுள்ள நிலையில் அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தின் கொண்டாட்டத்தை மேற்கொண்டனர்.
சூர்யா பாராட்டு: இந்நிலையில் டிஜே ஞானவேலின் முதல் நாயகனான நடிகர் சூர்யா வேட்டையன் படத்திற்கு தன்னுடைய பாராட்டுகளை வாழ்த்துக்களையும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வேட்டையன் படம் சமூக கருத்துக்களுடன் என்டர்டைன்மெண்ட்டையும் மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் நடித்துள்ள சீனியர் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்து தன்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

அடுத்தப்படம் எப்படி இருக்கும்?: தன்னுடைய முதல் படத்திலேயே சமூக அக்கறையை வெளிப்படுத்தி ஜெய் பீம் படத்தை கொடுத்திருந்த டிஜே ஞானவேல், அடுத்ததாக வேட்டையன் படம் மூலம் தன்னை கமர்சியல் பக்கத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்து அவர் ஜெய் பீம் போன்ற படத்தை கொடுப்பாரா அல்லது வேட்டையன் போன்ற கமர்சியல் படங்களிலும் கவனம் செலுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











