தங்க மனசுங்க.. வயநாடு நிலச்சரிவு.. ஓடோடி வந்து நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா!
சென்னை: கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள மாநில அரசு பொதுமக்களிடம் நன்கொடை கேட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சங்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 8 மீட்டர் அளவில் இருந்த ஓடை இப்போது பெரிய ஆறுபோல் காட்சியளிப்பதாகவும், அங்கிருந்த குடியிருப்புவாசிகளின் நிலைமை என்ன ஆனதென்று தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் நடுங்கிக் கொண்டும் கண்ணீர் மல்கவும் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென் மேற்குப் பருவமழை துவங்கியது. அப்போதிருந்தே அங்கு கன மழை தொடர்ந்து கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை அடித்து துவைத்து வந்தது.

தென்மேற்குப் பருவமழை துவங்கி கிட்டத்தட்ட 2 மாதத்துக்கு மேலான நிலையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில்தான், வயநாடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதாவது ஜூலை 30ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

பெரும் துயரம்: இதனால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. மழையும் பெய்து வருவதால் வெள்ளம் குறையாமல் போய்க்கொண்டே உள்ளது. நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

விலங்குகள் உட்பட: நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் படையினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த வடமாநிலத் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் விலங்குகள் என அனைத்தையும் மீட்புத் துறையினர் மூலமாக பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

ரூ.50 லட்சம் நிவாரணம்: இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சங்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பதறும் நெஞ்சு: ஏற்கனவே நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், " நெஞ்சே பதறுகிறது.. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. மக்களை காப்பாற்றும் பணியில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்" என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











