Suriya - சித்திக் வீட்டுக்கு சென்ற சூர்யா.. கம்பேக் கொடுத்த இயக்குநரை மறக்கலாமா விஜய்?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: Suriya (சூர்யா) மறைந்த இயக்குநர் சித்திக் வீட்டுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சித்திக் லாலுடன் கூட்டணி அமைத்து பல படங்களை இயக்கினார். ஒருகட்டத்தில் தனியாக படம் இயக்கி அதிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றார். சித்திக்கின் படங்களில் காமெடி எப்போதுமே தூக்கலாக இருக்கும். சட்டென்று நினைவிலிருந்து மறைந்துபோகாதபடிதான் அவரது படத்தில் இருக்கும் காமெடி காட்சிகள் அமைந்திருக்கும்.

ப்ரெண்ட்ஸ்: 1999ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரெண்ட்ஸ் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தை அதே பெயரிலேயே 2001ஆம் ஆண்டு தமிழில் ரீமேக் செய்தார். விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா, தேவயானி, சார்லி, ராதாரவி, மதன் பாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் காமெடி காட்சிகள் காலத்தால் அழியாதவை. வடிவேலுவின் கரியரில் ரொம்பவே முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த சித்திக்: மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கிய அவர் கடைசியாக மோகன் லாலை வைத்து பிக் பிரதர் படத்தை இயக்கினார். அதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நிமோனியா மற்றும் கல்லீரல் பாதிப்பைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டதால் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
வீட்டுக்கு சென்ற சூர்யா: அவரது மறைவுக்கு மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். சூர்யாகூட சித்திக்கிற்காக நீண்ட இரங்கல் பதிவை வெளியிட்டிருந்தார். இந்தச் சூழலில் நடிகர் சூர்யா சித்திக் வீட்டுக்கு நேராக சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
மறந்துபோன விஜய்: இந்தச் சூழலில் சூர்யா நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்திருக்கிறார். ஆனால் விஜய்யோ ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. அவர் இப்போது வேண்டுமானால் இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கலாம். அவரது ஆரம்பகட்டத்தில் ப்ரெண்டஸ் படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதேபோல் அழகிய தமிழ்மகன், வில்லு, சுறா என வரிசையாக விழுந்துகொண்டிருந்த விஜய்யை சித்திக்தான் காவலன் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வைத்தார். அதையெல்லாம் விஜய் எப்படி மறக்கலாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம் அவர் வெளிநாட்டில் இருப்பதால் இந்தியாவிற்கு திரும்பியதும் சித்திக் வீட்டுக்கு நேரடியாக செல்வார். ஏனெனில் அவர் புனித் ராஜ்குமார் உயிரிழந்தபோதுகூட நேரடியாக சென்றவர். எனவே இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு விஜய்யை யாரும் விமர்சனம் செய்ய தேவையில்லை என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











