ஆதி நெருப்பே.. ஆறாதே நெருப்பே.. கங்குவா முதல் பாடல் வெளியானது!
சென்னை: நடிகர் சூர்யாவின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள கங்குவா படத்தின் முதல் பாடலான ஆதி நெருப்பே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருது வரை சென்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து பட்டையை கிளப்பி உள்ளார்.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கங்குவா: வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் சூர்யா. 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்திலிருந்து கங்குவா படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. விவேக் மற்றும் மதன் கார்க்கின் பாடல் வரியில் உணர்ச்சிபூர்வமாக வெளியாகி உள்ள ஆதி நெருப்பே..ஆறாதே நெருப்பே.. பாடலை மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் இணைந்து பாடி உள்ளனர். இந்த பாடலில் கையில் வாலுடன் ஆக்ரோஷமாக இறக்கி ஆடி உள்ளார். சற்று முன் வெளியான இந்த பாடல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சூர்யா 44: முன்னதாக சூர்யாவின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யா 44 படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு காதல், ஒரு சிரிப்பு, ஒரு யுத்தம் என்ற வரிகள் தொடங்கும் அந்த கிளிம்ஸ் வீடியோவில், 80களின் வில்லன் போல பெரிய மீசையும், ஃபங்க் ஹேர்ஸ்டைலும் சூர்யா மாஸாக இருக்கிறார். இதில் சூர்யா புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்று இருப்பதால், அது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











