Retro Box office: ரெட்ரோ படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் மே 1ந் தேதி வெளியான நிலையில், படம் நான்கு நாட்களில் எவ்வளவு வசூலை பெற்றுள்ளது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், கருணாகரன், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா இணைந்து தயாரித்துள்ளனர்.
பீட்சா, இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவை அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக காட்டி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். வழக்கமாக ஒரு படத்தில் ஆறு ஏழு சண்டை காட்சிகள் தான் இருக்கும், ஆனால், இந்த படத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் மூலம் சூர்யா, ஒரு ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டதாக படம் பார்த்தவர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

ரெட்ரோ: சூர்யா, பாரிவேல் கண்ணன் என்ற கதாபாத்திரத்திலும், பூஜா ஹெக்டே, ருக்மணி என்ற ரோலிலும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். பூஜாவிற்கு சூர்யாவின் ரௌடித்தனத்தால், வாழ்க்கை வீணாகிவிடும் என்ற பயம் இருப்பதால், கோபத்தையும், ரவுடித்தனத்தையும் விட்டுவிட்டு வா திருமணம் செய்து கொள்ளாமல் என்று, சொல்ல சூர்யாவும் தனது காதலுக்காக அனைத்தையும் விட்டுவிடுகிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்காவுக்குக் கடத்தப்பட்ட ஒரு தங்க மீன் காணாமல் போய்விடுகிறது. அது சூர்யாவிடம் தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட, சூர்யாவின் வளர்ப்பு தந்தை ஜோஜு ஜார்ஜ், திருமண விழாவுக்கு வந்து பிரச்சனை செய்ய, அது சண்டையில் முடிய, சூர்யா மீண்டும் கத்தியை கையில் எடுக்கிறான். இதில், ஜோஜு ஜார்ஜின் கை வெட்டப்பட, சூர்யா சிறைக்குச் செல்கிறார். இதில், சூர்யாவின் காதல் என்னவானது, தங்க மீனை யார் கடத்தியது போன்ற பல திருப்பங்களுடன் ரெட்ரோ படத்தின் இரண்டாம் பாதி நகர்கிறது.
நான்காம் நாள் வசூல்: இப்படம் வெளியாவதற்கு முன்பே ரெட்ரோ படத்தின் 'கனிமா' மற்றும் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியாகி அதிக அளவில் ட்ரெண்டான நிலையில், ரெட்ரோ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. இதையடுத்து மே 1ந் தேதி ரெட்ரோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அடுத்தடுத்து தோல்வி படத்தால் துவண்டு இருந்த சூர்யாவுக்கு இப்படம் கம்பேக் படமாக அமைந்துள்ளது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால், இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கி அட்லுரி படத்தில் கமிட்டாகி உள்ளார் சூர்யா. நாக வம்சி தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கிவிட்ட நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ரூ 85 கோடிக்கு வாங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











