கள்ளச்சாராய மரணம்.. தமிழக அரசை கடுமையாக கண்டித்த சூர்யா!
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும், இதற்கான அனைத்துத் காரணிகளை கண்டறியவும், எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று தமிழக வெற்றிக்கழக தலைவரும்,நடிகருமான விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும்,பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆறுதல் கூறிவரும் நிலையில், நடிகர் சூர்யா இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
சூர்யா அறிக்கை: அதில், ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும் பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்க செய்கிறது.
மனம் பதறுகிறது: விஷசாராயத்திற்கு அன்பிற்குரியவர்களை பலி கொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்விடமுடியும். தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள் மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும்,கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு இழப்பை குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.
வருத்தம் அளிக்கிறது: கடந்த ஆண்டு இதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷசாராயத்தை குடித்து 22 பேர் பலியானார்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள். இப்போது வரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

மதுவிலக்கு கொள்கை: வாழ்வை மேம்படுத்துவார்கள் என்று நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கும் அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறோம். மதுவிலக்கு கொள்கை என்பது எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் பேசுபொருளாக மட்டுமே முடிகிறது.
கடும் கண்டனம்: அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணத்தை தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார்கள் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை என நடிகர் சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











