மீண்டும் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு நா தழுதழுத்து கண்கலங்கிய சூர்யா.. நெகிழ்ந்து போன பார்வையாளர்கள்!
Recommended Video
சென்னை: நடிகர் சூர்யா மீண்டும் மேடையில் கண்கலங்கி நா தழுதழுத்த சம்பவம் பார்வையாளர்களை நெகிழச் செய்தது.
நடிகர் சூர்யாவின் "அகரம் அறக்கட்டளை" துவங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு விழா சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் சூர்யா, அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார், சகோதரர் கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளையில் பயின்ற மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவின் தொடக்கமாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அடையாளம்
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், இன்னும் 100 படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்தாலும், "அகரம்" தான் சூர்யா அடையாளம் என்றார். இதேபோல் உழவன் ஃபவுண்டேஷன் தான் கார்த்தியின் அடையாளம் என்று கூறினார். நேர்மையாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் வாழ்வில் உயரலாம் என்றும் நடிகர் சிவக்குமார் தெரிவித்தார்.

வாழ்க்கை
பின்னர் பேசிய சூர்யா, குடும்பம், சமூகம் மற்றும் செய்யும் தொழில் ஆகிய மூன்றுக்கும் மாணவர்கள் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். படங்களில் நடிப்பதன் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் உதவியுடன் இன்னும் அதிகமாக உதவுவேன் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்தார். மேலும் சமூகத்தை பற்றி சிந்திப்பதுதான் வாழ்க்கை என்றும் சூர்யா கூறினார்.

சாதிப் பெயர்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே, பெரும்பாலான அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்தார். பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் சாதிப் பெயரை சொல்லி திட்டுவது போன்ற நிகழ்வுகள் வருத்தமளிக்கும் வகையில் இருப்பதாகவும் நடிகர் சூர்யா கூறினார்.

கண்கலங்கினார்
தொடர்ந்து அறக்கட்டளை நிர்வாகிகளின் அர்ப்பணிப்பை புகழ்ந்து பேசிய சூர்யா, குடும்பத்தைக் காட்டிலும் அகரம் அறக்கட்டளைக்காக அதிக நேரம் செலவழிக்கும் அகரம் அறக்கட்டளை நிர்வாகி ஜெயஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தினரை மேடைக்கு அழைத்து கவுரவித்தார். அப்போது அவர்களை ஆரத்தழுவி கண்கலங்கினார். சூர்யா உணர்ச்சிவசப்பட்டு நா தழுதழுத்து கண்கலங்கியது பார்வையாளர்களை நெகிழச் செய்தது.

அமைச்சர் முன்னிலையில்
கடந்த மாதம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற அகரம் நிகழ்ச்சியின் நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா, மாணவி ஒருவரின் உருக்கமான பேச்சைக் கேட்டு கதறி அழுதார். அமைச்சர் முன்னிலையிலேயே அழுத அவர் மாணவியை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் நடிகர் சூர்யா மீண்டும் மேடையில் கண்கலங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











