மயில்சாமி என்னடா அவசரம் உனக்கு.. இப்படி படார்னு போய்ட.. கலங்கிய எஸ்.வி.சேகர்!
சென்னை : நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் உருக்கமான இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மயில்சாமிக்கு ஒரு மனைவியும் அன்பு, யுவன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். நாளை காலை இறுதிசடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மயில்சாமி
சிவபக்தரான மயில்சாமி நேற்று கோவளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் இரவு நடைபெற்ற பூஜையில் கண் விழித்து கலந்து கொண்டார். அதிகாலை 3 மணி வரை டிரம்ஸ் சிவமணியுடன் பாட்டுப்பாடினார். வழிபாட்டை முடித்துவிட்டு காரில் வந்து கொண்டிருக்கும் போது, மயில்சாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

உயிரிழந்தார்
இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயில்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்,ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காலையில் அவரது உடல் பாதுகாப்புடன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, டிரம்ஸ் சிவமணி, கோவை சரளா, செந்தில் என பலர் மலர் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

எஸ்வி சேகர்
இந்நிலையில், எஸ்வி சேகர், மயில்சாமியின் மறைவுக்கு வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். மயில்சாமி காலையிலே எழுந்ததுமே இப்படி ஒரு துக்ககரமான செய்தியை கொடுத்துவிட்டு படார்னு போய்ட. நேத்தி ராத்திரிக்கூட கோவிலில் இருந்து பேசுன, நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்று பாட்டு போட்டு கிரபிரவேஷத்தை முடித்தேன் என்று சொன்ன.

நிச்சயம் உனக்கு சொர்க்கம் தான்
இவ்வளவு அவசரமாக இந்த உலகத்தை விட்டு போவதற்கு உனக்கு என்ன, 57 வயது தானே. நீ 80 வயசு 100 வயசு வரை இருந்து இருக்கலாம். ஆனால், இது எல்லாம் உன் கையிலோ, என் கையிலோ இல்லை. இருந்தாலும், சிவபக்தனான நீ, மூன்று கால பூஜையை பார்த்துவிட்டு இறந்து இருக்கிறாய், உனக்கு சொர்க்கம் நிச்சயம். ஆனால், வீட்டில் இருப்பவர்களை நீ நினைச்சி பார்த்தியா? அவர்களை ஏன் படார்னு விட்டுட்டு போய்ட.
நீ வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய்
மிமிக்ரி கலைஞனாக பயணத்தை தொடங்கிய நீ, நல்ல நகைச்சுவை நடிகன் என்பதை நிரூபித்து இருக்கிறாய். உன்னுடைய இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. என்ன செய்ய முடியும் நல்லபடியா போய்ட்டுவா, சினிமா இருக்கும் வரைக்கும், நகைச்சுவை இருக்கும் வரைக்கும் நீ வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய் என நடிகர் எஸ்வி சேகர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











