Ajith - வடிவேலுதான் நல்லவரு.. அஜித் பப்ளிசிட்டி மன்னன்.. சண்டைக்கு செல்லும் டெலிபோன் ராஜ்
சென்னை: Ajith (அஜித்) வடிவேலு குரூப்பில் நடித்த டெலிபோன் ராஜ் அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்து பேட்டி கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை அடையாளம் தெரியாமல் சிதைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு.

ரீ என்ட்ரி: அதன் காரணமாக சில வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் வடிவேலுவின் நடிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வடிவேலு தன்னை அப்டேட் செய்துகொள்ளவில்லை என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் வெளியேறிவிடுவார் எனவும் வெளிப்படையாக விமர்சனத்தை வைத்தனர் ரசிகர்கள்.
மாமன்னன்: இந்தச் சூழலில் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தாலும் வடிவேலுவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம். கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியாகி படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வடிவேலு தனது நடிப்பில் பயங்கரமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
இன்னொரு முகம்: இந்தப் படத்தின் மூலம் வேறு ஒரு வடிவேலு தமிழ் சினிமாவில் பிறந்திருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள். எமோஷனல் காட்சிகளில் அவ்வளவு எதார்த்தமாக நடித்திருக்கிறார். நிச்சயம் இனி வரும் காலங்களில் மிகச்சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்கள் வடிவேலுவுக்காக எழுதப்பட்டு அதில் அவரை நடிக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் வைகைப்புயலின் ரசிகர்கள்.
அஜித்துடன் சண்டை: இதற்கிடையே தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் தொடர்ந்து நடித்த வடிவேலு அஜித்துடன் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ராஜா படத்துக்கு பிறகு நடித்ததே இல்லை. அதற்கு காரணம், ராஜா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தின் பெயரை சொல்லி வடிவேலு அழைத்துவிட்டார். அது அஜித்துக்கு பிடிக்கவில்லை. அப்போதிருந்துதான் வடிவேலுவுடன் நடிப்பதை அஜித் தவிர்த்தார் என தகவல் ஒன்று ஓடுவது வழக்கம்.
டெலிபோன் ராஜ்: இந்நிலையில் வடிவேலுவின் குரூப்பில் காமெடி காட்சிகளில் நடிக்கும் டெலிபோன் ராஜ் இதுகுறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு இடத்தில் பணியாற்றும்போது நண்பர்களாக பழகுவதில் என்ன தவறு. அப்படி நினைத்துதான் அஜித்தின் பெயரை சொல்லி அழைத்திருக்கிறார் வடிவேலு. ஆனால் அஜித்தோ அதை ஈகோவாக பாத்துவிட்டார்.
பப்ளிசிட்டி: அஜித் வயதானவர் கிடையாதே. சொல்லப்போனால் வடிவேலுவைவிட சிறியவர்தான். அப்படி இருக்கும்பட்சத்தில் பெயர் சொல்லி அழைப்பதில் ஒரு தவறும் இல்லை. இதனால் தான் வடிவேலுவை அவர் படத்தில் கமிட் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன். தான் செய்யும் உதவிகள் மற்றவருக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கத்திலேயேதான் செய்வார் என்றார்.
இந்தப் பேட்டியை பார்த்த அஜித் ரசிகர்கள்; வடிவேலு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருப்பதால் அவரை தாஜா செய்து நடிக்க வாய்ப்பு வாங்குவதற்காகத்தான் டெலிபோன் ராஜ் இப்படி பேசுகிறார் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











