ரசிகனை தொண்டனாக மாற்றுங்கள்.. உங்களை நெருங்க முடியவில்லை.. விஜய்க்கு அவர் நண்பர் சொன்ன அட்வைஸ்
சென்னை: விஜய் தற்போது அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கியிருக்கும் அவர் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் களம் காண்கிறார். சினிமாவில் பீக்கில் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதை பலரும் பாராட்டிவருகிறார்கள். அரசியல் மேடை ஏறினாலே திமுகவை கடுமையாக விமர்சித்துவரும் விஜய் இப்போது ஜன நாயகன் என்கிற படத்தில் நடித்துவருகிறார். அதுதான் அவரது கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி கடந்த பல வருடங்களாகவே மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்துவந்தார். இதன் காரணமாக அவர் அரசியலுக்கு அச்சாரம் போடுகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இப்படிப்பட்ட சூழலில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கிய கையோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கருதப்பட்டது. ஆனால் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில்தான் களமிறங்குவோம் என்று தெரிவித்துவிட்டார். விஜய்யின் இந்த ஸ்டாண்டை அப்போதே பலரும் விமர்சித்தார்கள்.

திமுகதான் எதிரி: இப்படிப்பட்ட நிலையில் விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது திமுகதான் தமிழ்நாட்டில் தங்களது அரசியல் எதிரி என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதற்கு பிறகு அவர் ஏறிய அத்தனை அரசியல் மேடைகளிலும் தொடர்ந்து திமுகவை கடுமையாக தாக்கி பேசிவருகிறார். இதன் காரணமாக அவர் பாஜகவின் பி டீம் என்று திமுகவினர் விளாச தொடங்கினார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; ஆளும் தரப்பு செய்யும் தவறை தங்கள் தலைவர் சுட்டிக்காட்டுகிறார் அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தவெகவினர் பதிலடி கொடுத்துவருகிறார்.
ஜன நாயகன்: இதற்கிடையே முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்கும் முடிவையும் எடுத்துவிட்டார் விஜய். அதன் காரணமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் தற்போது நடித்துவரும் ஜன நாயகன் திரைப்படம்தான் கடைசி படமாக இருக்கும் கருதப்படுகிறது. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் படமானது 2026ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்திலிருந்து வெளியான இரண்டு போஸ்டர்களும் பெரிய வரவேற்பை பெற்றன.
விஜய்க்கு வரவேற்பும் இருக்கு: தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோ. ஆனால் அதையெல்லாம் துச்சமாக தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு அவர் வந்திருப்பதை பலரும் பாராட்டிவருகிறார்கள். மேலும் நடிகர் தாடி பாலாஜியும் தவெக கட்சியில் இணைந்திருக்கிறார். அவரும் விஜய்யும் சேர்ந்து நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், சச்சின் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பாலாஜி ஓபனாக பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

தாடி பாலாஜியின் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நான் நடித்த முதல் படமே விஜய் நடித்த நிலாவே வா திரைப்படம்தான். அந்தப் படத்தில்தான் நான் இன்ட்ரோ ஆனேன். அப்போதிருந்தே நானும் அவரும் நெருக்கமாகிவிட்டோம். என்னவென்று தெரியவில்லை நான் பேசியது அவருக்கு பிடித்துவிட்டது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நானும், அவரும் நெருங்கி பழகியிருக்கிறோம். எனக்கு தனிப்பட்ட முறையில் விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் நிறைய உதவிகளை செய்திருக்கிறார்கள். எனது வீட்டுக்கு விஜய்யும் அஜித்தும் வந்திருக்கிறார்கள். சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்த காலகட்டத்தில் இரண்டு பேருடனும் சேர்ந்து நடித்திருக்கிறேன். அவர்களுக்குள் எந்த மோதலும் இல்லை.
தொடர்ந்து 12 படங்கள்: விஜய்யுடன் நான் தொடர்ந்து 12 படங்களில் நடித்திருக்கிறேன். அவர் படத்தில் நண்பர் கேரக்டர் என்றாலே எனது பெயரை எழுதிவிடுவார்கள். அவரின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நானும் பேசமாட்டேன் அவரும் என்னிடம் எதுவும் சொல்லமாட்டார். அவர் கட்சி ஆரம்பிக்கும் முன்னரிலிருந்தே அவரது பனையூர் அலுவலகத்துக்கு நான் சென்றுகொண்டிருக்கிறேன். அதுமட்டுமின்றி அவரது மக்கள் இயக்கம் செய்த அனைத்து நலத்திட்ட நிகழ்வுகளிலும் நான் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறேன். அவரது நெருங்கிய நண்பனாக இருந்த நான் இப்போது விஜய்யின் தொண்டனாக மாறியிருக்கிறேன். அவர் நிறைய விஷயங்களை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதுதான் உண்மை.
பிக்பாஸ் கேமராவைவிட ஸ்ட்ராங்: விஜய்யின் கண்கள் பிக்பாஸ் கேமராக்களைவிட ஸ்ட்ராங். அவ்வளவு கூர்மையாக அவரது கண்கள் அனைத்தையும் கவனிக்கும். விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லி அவரை தாழ்த்த முயற்சிக்கிறார்கள். அவர் முழு நேரமாக அரசியல் களத்துக்கு வரும்போது விஜய்க்கு என்ன தெரியும் என்பது அனைவருக்கும் தெரியவரும் என்பதை சொல்லிக்கொள்கிறேன். விஜய்க்கு உண்மையில் முக்கால்வாசி தூக்கம் போய்விட்டது. சினிமாவில் அவர் இருந்தபோது ரசிகர்களுக்கு தலைவராக இருந்தார். இப்போது அவர் ஒரு கட்சிக்கு தலைவராக மாறியிருக்கிறார். அதுமட்டுமின்றி பொதுமக்களின் நபராகவும் அவர் இருக்கிறார். அதை புஸ்ஸி ஆனந்த் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும்.

தெளிவாக இருக்கிறார்: தவெகவின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் தொடக்கத்திலிருந்தே பயணித்துக்கொண்டிருக்கிறார்தான். அதே நேரத்தில் தன்னை தாண்டி யாரும் விஜய்யை பார்த்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒரு தொண்டன் தனது குறையை தலைவனிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் கட்சியின் நிலைமை என்ன, தொண்டனின் மனநிலை என்ன என்பது தலைவனுக்கு தெரியும். இப்போது கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர்ந்திருக்கிறார். அவரிடம் ஆளுமை இருப்பதால் விஜய்யிடம் நெருங்க முடிகிறது. ஆனால் எல்லோரும் சென்று விஜய்யை சென்று பார்க்க முடியாது. அதுதான் எனக்கு சின்ன வருத்தமாக இருக்கிறது. அவருக்கு இன்னும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.
தொண்டனாக மாற்றுங்கள்: விஜய்க்கு இன்னும் ரசிகர்களாகவே இருப்பவர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும். ரசிகர்கள் என்றால் படம் பார்த்து விசில் அடித்து சென்றுவிடுவார்கள். ஆனால் தொண்டன் ஒருவர்தான் தலைவருடன் பயணிப்பார். ரசிகர்களிடம் விஜய்யின் அரசியலை பரப்ப வேண்டும். அதுவிட்டுவிட்டு பொங்கல், வடை வருமா என்று இருக்கிறார்கள். இது கட்சியா இல்லை ஹோட்டலா?.. நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. ரசிகனிடம் நீங்கள் தவெகவின் தொண்டர்கள் என்பதை உணர்த்த வேண்டும். ஆதவ் அர்ஜுனாவுக்கும், புஸ்ஸி ஆனந்த்துக்கும் இல்லாத சிறப்பு எனக்கு ஒன்று இருக்கிறது. அது விஜய்யின் நண்பர் என்பதுதான். அவரை நான் தலைவராக பார்க்கிறேன். அவரது தொண்டன் நான். புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு முன்பு புதுச்சேரி செக்போஸ்ட் போல் நின்றுகொண்டிருக்க்கிறார்" என்றார். அவரது இந்தப் பேட்டி பலரிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











