'எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்'... பிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு!
பிரித்திகா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக நடிகர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தன் மீது பாலியல் புகார் கூறிய பெண் புகைப்பட கலைஞர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக நடிகர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பொன்னர்சங்கர் படப்பிடிப்பின் போது, அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் மீ டூ ஹேஷ்டேகில் புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை நடிகர் தியாகராஜன் மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொன்னர்சங்கர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை காண்பித்தார். இது போன்ற பிஸியான நேரத்தில் தான் எப்படி பாலியல் தொந்தரவு கொடுத்திருக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இது குறித்து அவர் கூறியதாவது,

பொய்யான குற்றச்சாட்டு
"பிரித்திகா மேனன் கூறியது அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டு. அவரது இந்த பதிவால் கடந்த 50 வருடங்களாக நான் சம்பாதித்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

ஆபத்தான நிலைமை
யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் குற்றஞ்சாட்டலாம் எனும் நிலை ஆபத்தானது. ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படும் போது, சம்மந்தப்பட்டவரிடம் விசாரித்துவிட்டு செய்தி வெளியிடுவது தான் பத்திரிகை தர்மம். இதை பத்திரிகைகள் கடைப்பிடிக்க வேண்டும்.

மூச்சுவிடக்கூட நேரமில்லை
பிரித்திகா சொன்ன அந்த நாளில் பொன்னர்சங்கர் படப்பிடிப்பில் நாங்கள் அனைவருமே மிக பிஸியாக இருந்தோம். மூச்சுவிடக்கூட நேரமில்லாத அந்த சூழலில், நான் எப்படி அவருடைய ரூம் கதவை தட்டியிருக்க முடியும்.

ஏன் என புரியவில்லை
அந்த பெண் ஏன் இப்படி குற்றஞ்சாட்டினார் என புரியவில்லை. ஒருவேளை விளம்பரத்துக்காக இருக்கலாம் என நினைக்கிறேன். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

நற்பெயருக்கு களங்கம்
பிரித்திகா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகிறேன். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அது குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் அவர் மீது வழக்கு தொடரப்படும்", என அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











