எல்லோரையும் சிரிக்க வைத்த கலைஞன்.. சிகிச்சைக்கு கூட பணமில்லாமல்.. மனதை உலுக்கும் நடிகரின் மரணம்!
சென்னை: நடிகர் வடிவேல் பாலாஜி சிகிச்சைக்கான செலவுக்கு கூட பணமில்லாமல் அவல நிலையில் இருந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனது.
Recommended Video
பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து காமெடி நிகழ்ச்சிகளிலும் வடிவேல் பாலாஜியின் பங்களிப்பு இருக்கும்.

வடிவேலுவின் சாயல்
நடை, உடை பாவனை, ரியாக்ஷன்ஸ் என அனைத்திலும் நடிகர் வடிவேலுவை உரித்து வைத்திருப்பார். இதனாலேயே அவரது பெயரான பாலாஜிக்கு முன்னால் வடிவேல் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.

சமமாக ஸ்கோர் செய்வார்
கலக்கப்போவது யாரு, அது இது எது என பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனியாக வந்தாலும் சரி, சக கலைஞரான ராமருடன் வந்தாலும் சரி, சரிக்கு சமமாக ஸ்கோர் செய்வார் வடிவேல் பாலாஜி.

சிரிக்க வைக்காமல்..
அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு செக்மெண்டில் போட்டியாளர்களை சிரிக்க வைக்காமால் செல்ல மாட்டார் இந்த வடிவேல் பாலாஜி. அப்படிப்பட்ட நகைச்சுவை கலைஞன் முதல் முறையாக எல்லோரையும் அழ வைத்து சென்று விட்டார்.

என் ராசாவின் மனசிலே
மதுரையை பூர்விகமாக கொண்ட நடிகர் வடிவேல் பாலாஜி 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கடைசியாக நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த கோல மாவு கோகிலா படத்தில் நடித்தார்.

மனதை உலுக்கும் தகவல்
வெளி நாடுகளிலும் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக அவர் மரணத்துடன் போராடிய தகவல் பலரையும் உலுக்கி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

கடுமையான நிதி நெருக்கடி
இதனை தொடர்ந்து அவருடைய கை கால்கள் வாதத்தால் செயலிழந்தன. உடனடியாக சென்னை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அதிக செலவானது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்துள்ளார் வடிவேல் பாலாஜி.

செலவுக்கு பணமில்லை
சிகிச்சைக்கான செலவுக்கு பணமில்லாமல் கஷ்டப்பட்ட குடும்பத்தினர் அவரை சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கும் மருத்துவ செலவு கட்டுப்படியாகவில்லை. இதானல் செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர் அவரை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

உயிர் பிரிந்தது
அங்கு கொரோனா நோயாளிகளால் படுக்கைகள் நிரம்பியிருந்தன. இதனால் இந்நிலையில் இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் வடிவேல் பாலாஜி. ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்தது.

அலைக்கழிந்து அகால மரணம்
தன்னுடைய நகைச்சுவை திறமையால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் வடிவேல் பாலாஜி, மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைகழிந்து அகாலமாக மரணமடைந்துள்ளார். வடிவேல் பாலாஜி மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் வறுமையில் போராடிய உயிரை விட்ட தகவல் பலரையும் பதற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











