ஏற்கனவே அப்படி ஒரு பிரச்சனை.. இப்போ இப்படி ஒரு கலாய் தேவையா.. பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை மீண்டும் கலாய்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மாற்று அரசியலுக்காக தனது மூன்று திட்டங்களை கூறினார்.
சிஸ்டம் சரி செய்யாமல், ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது என குறிப்பிட்ட ரஜினி, புதியவர்கள், இளைஞர்கள் கட்சிப் பதவிக்கு வருவதில்லை என்றும், அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் வருகிறார்கள் எனவும் விமர்சித்தார்.

தனித்தனி தலைமை
அரசியல் வருகையையொட்டி 3 முக்கிய திட்டங்களை ரஜினி முன்வைத்துள்ளார். இதில் கட்சியில் தேவையான அளவு மட்டுமே கட்சிப் பதவிகள் வழங்கப்படும் என்றும், 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்சிப் பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே தன் திட்டம் என ரஜினி கூறினார்.

வடிவேலு கருத்து
முதல்வர் பதவியை தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்தின் இந்த அரசியல் நிலைப்பாடு குறித்து பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகரான வடிவேலுவும் ரஜினி குறித்து பேசியிருக்கிறார்.

அவருக்கே தெரியாது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேல் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடும்ப நலன் வேண்டியும் உலக நன்மைக்காகவும் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். மேலும் புதிய பட வாய்ப்புகளை கடவுள் தருவார் என்றார். தொடர்ந்து நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டற்கு, நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது என விமர்சித்தார்.

நான்தான் சிஎம்மு
மேலும் கட்சிக்கு ஒருவரும், ஆட்சிக்கு ஒருவரும் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றும்
ரஜினி முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்பது நல்ல விசயம் என்றும் மக்களுக்கு நல்லதை யார் செய்தாலும் வரவேற்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் வருகின்ற 2021- ல் நான் தான் சிஎம்மு என்றும் கிண்டலாக கூறினார் வடிவேலு. தொடர்ந்து அவரிடம் ரஜினியின் புதிய கட்சியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

படங்கள் இல்லை
நடிகர் வடிவேல், ஷங்கர் தயாரிப்பில் உருவாகவிருந்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி திரைப்படம் ஏற்ப்பட்ட ஒரு சில பிரச்னைகளால் படம் பாதியிலேயே நின்று போனது. இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது. இதனால் புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். அவரது நடிப்பில் படங்கள் வெளியாகியே நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டன.

தலைவன் இருக்கின்றான்
கடந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா வாழ்க்கையை கவுரவிக்கும் வகையில் உங்கள் நான் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற வடிவேலுக்கு கமலின் அடுத்தப்படமான தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைக்காட்டி வருகிறார் வடிவேலு.

ராணாவாவது காணாவாவது
ஏற்கனவே பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த்தின் ராணா படத்தை வைத்து ராணாவாவது காணாவாவது என கடுமையாக விமர்சித்திருந்தார். இதன் காரணமாகவே அதன் பிறகு தான் நடித்த படங்களில் வடிவேலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நோ சொன்னதாக கூறப்பட்டது. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடிகர் வடிவேலுவை வேண்டாம் என சொன்னதாக பேச்சு எழுந்தது.

இது தேவையா?
தற்போது மீண்டும் ரஜினிகாந்தை வடிவேல் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கவனித்த நெட்டிசன்கள், அப்போது விமர்சித்த பிரச்சனையே இன்னும் தீரவில்லை, இதில் இப்போது இந்த கலாய் தேவையா என்று வடிவேலுவை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











