'என் நண்பன் இறந்துட்டான்.. துக்கம் தொண்டைய அடைக்குது'.. நடிகர் வடிவேலு கதறல்!
சென்னை: நடிகர் விவேக்கின் மறைவு குறித்து அவரது நெருங்கிய நண்பரான நடிகர் வடிவேலு துக்கம் தொண்டையை அடைப்பதாக கதறியுள்ளார்.
Recommended Video
மாரடைப்பு காரணமாக நேற்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று காலை சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகினர்.

போடா வாடா என்ற அளவில்
இந்நிலையில் நடிகர் விவேக்கின் நெருங்கிய நண்பரான வடிவேலு கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். வடிவேலும் விவேக்கும் போடா வாடா என பேசிக்கொள்ளும் அளவிற்கு நட்பை கொண்டிருந்தனர். பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

என் நண்பன் இறந்துட்டான்
தற்போது மதுரையில் உள்ள நடிகர் வடிவேலு, விவேக்கின் மரண செய்தியை அறிந்து கண்ணீர்விட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, "காலையில செய்தியில் பார்த்தேன் என் நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டான். செய்தியை கேள்விபட்டு ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டேன்.

துக்கம் தொண்டைய அடைக்குது
அவனும் நானும் நிறைய படங்கள்ல இணைஞ்சு நடிச்சுருக்கோம்.
அவன பத்தி பேசும் போது துக்கம் தொண்டைய அடைக்குது.
ரொம்ப நல்லவன், உதவுற சிந்தனை அதிகமா இருக்கும் அவனுக்கு.
அப்துல் கலாம் ஐயாக்கிட்ட ரொம்ப நெருக்கமா இருந்தான்.
விழிப்புணர்வு பிரச்சாரம், மரத்த நடுறது, இப்படி எவ்வளவோ விஷயம் பண்ணுவோன்.

எதார்த்தமா பேசுவான்
ரொம்ப உரிமையா போடா வாடான்னு பேசிப்போம். அவன மாதிரி ஓபனா பேசுற ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்கள்ல அவன் எனக்கு ரசிகன், நான் அவனுக்கு ரசிகன். பேசுற ஒவ்வொரு வார்த்தையும் மனசுல பதியிற மாதிரியே இருக்கும். எதார்த்தமா பேசுவான். அவனுக்கு இப்படி ஒரு மரணம் வந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு.
மனச விட்றக்கூடாது
என்னால முடியல, இந்த நேரத்துல என்ன பேசுறதுன்னு தெரியல. அவன நேர்ல பார்த்து வந்து அஞ்சலி செலுத்த முடியல. நான் மதுரையில என் தாயாரோட இருக்கேன். நெஞ்சார்ந்த இரங்கல தெரிவிச்சுக்கிறேன். எல்லாரும் தைரியமா இருக்கணும். மனச விட்றக்கூடாது. விவேக் எங்கேயும் போகல. உங்களோடதான் இருக்கான். மக்களோட மக்களா இருக்கான், அவன் ஆத்மா நல்லபடியா சாந்தியடையும்" இவ்வாறு நடிகர் வடிவேலு கண்ணீர்மல்க பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











