“சைத்தான் சனியன் எல்லாம் ஓடிப்போங்க.. நான் திரும்பவந்துட்டேன்”.. தெறி அப்டேட் கொடுத்த வடிவேலு
இந்த மாதத்திற்குள் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்த மாதத்திற்குள் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆவேன் என காமெடி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு, காமெடியில் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் வடிவேலு. மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆல்டைம் பேவரிட் டெம்ப்ளேட் வடிவேலு ரியாக்சன்கள் தான். பெரும்பாலான மீம்ஸ்களில் வடிவேலுவை தான் பார்க்க முடிகிறது.
ஒரு தலைமுறையையே தனது காமெடியால் சிரிக்க வைத்த மகா கலைஞனாக வடிவேலு கடந்த சில வருடங்களாக ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார். 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை.

பேய் மாமா
நீண்ட இடைவெளிக்கு சிம்பு தேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படமும் பிரச்சினையில் சிக்கிவிட்டது. இதையடுத்து சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா எனும் படத்தில் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சன் டிவி
இந்நிலையில் வடிவேலுவின் 59வது பிறந்தநாளையொட்டி பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த மாதத்திற்குள் தான் மீண்டும் நடிக்க வருவேன் என கூறுகிறார் வடிவேலு.

மிக்க நன்றி
இதுகுறித்து வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, " செப்டம்பர் 12ம் தேதி தான் என்னுடைய உண்மையான பிறந்த நாள். என்னை பெற்றெடுத்த எனது அம்மாவுக்கு முதலில் நன்றி. நான் இந்த அளவுக்கு ஆனானதற்கு காரணம் மக்கள் தான். மக்கள் சக்தி இல்லை என்றால் இந்த வடிவேலு இல்லை. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சன் டிவிக்கு மிக்க நன்றி.

மக்கள் சக்தி
இத்தனை நாட்களாக ஏன் நான் நடிக்கவில்லை என நீங்கள் கேட்கலாம். சீக்கிரம் செப்டம்பர் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். ஒரு மிகப்பெரிய, அருமையான எண்ட்ரியோக அது இருக்கும். எல்லோர் வாழ்விலும் சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? அங்கங்க இருக்க தான் செய்தது. மக்கள் சக்திக்கு முன்னால் அது ஒன்றுமில்லை'' என்றார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
வடிவேலுவின் இந்த வீடியோ அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நேசமணி இஸ் பேக் என மீம்ஸ் கிரியேட்டர்கள் ரெடியாகிவிட்டார். இனி வடிவேலுவின் அதிரடிகள் ஆரம்பமாகட்டும். தாரைப்பட்டைகள் கிழிய கம் பேக் ஆகப்போகிறார் நம்ம இம்சை அரசன்.


Click it and Unblock the Notifications











