Vijayakanth death: அவர் ரீல் ஹீரோ மட்டுமில்லீங்க.. ரியல் ஹீரோ.. வையாபுரி கண்ணீர்!
சென்னை: நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற இயர்பெயர் கொண்ட நடிகர் விஜயகாந்த், சினிமாவில் நடிப்பதற்காக விஜயகாந்த் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டவர். தமிழில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவராக வெற்றிகரமாக வலம்வந்தவர் விஜயகாந்த். கடந்த 1979ம் ஆண்டில் வெளியான அகல்விளக்கு என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமான விஜயகாந்த், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் விஜய்காந்த்.
கடந்த 1979ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த், கடந்த 2015ம் ஆண்டு வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்துள்ள விஜயகாந்த்தின் பல படங்கள் இந்தி, தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. தமிழில் இவரை பரட்சிக்கலைஞர் என்று ரசிகர்கள் கொண்டாடினர். விஜயகாந்திற்கு பிரேமலதா என்ற மனைவியும் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்களும் உள்ளனர். இவரது இளையமகன் சினிமாவில் சகாப்தம் என்ற படம் மூலம் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், அரசியல் தலைவர் என பன்முகம் காட்டியவர். இவரது நடிப்பில் வெளியான போலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. பறந்து பறந்து வில்லன்களை பந்தாடியவர் என்றவகையில் ரசிகர்கள் இவரை கொண்டாடினர். ஆக்ஷனில் மட்டுமில்லாமல் உணர்ச்சிப்பூர்வமான கேரக்டர்களிலும் தான் எப்போதுமே முன்னிலை வகிப்பவன் என்பதை ரமணா உள்ளிட்ட படங்களில் மெய்ப்பித்த விஜயகாந்த் இன்று நம்மிடம் இல்லை. அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அவரது மறைவு ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
வில்லனாக அறிமுகம்: சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த விஜயகாந்த், பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டில் இனிக்கும் இளமை என்ற படம் மூலம் ஹீரோவானார். தன்னுடைய விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டு சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தவர் இவர். இவரது நடிப்பில் கடந்த 1981ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
ரியல் ஹீரோ விஜயகாந்த்: வில்லனாக அறிகமானாலும் நாயகனாக பல படங்களில் தேசப்பற்றை வளர்க்கும் வகையில் வசனங்களை பேசி நடித்தவர் விஜயகாந்த். ஊழல், திருட்டு என சட்டவிரோத செயல்களுக்கு இவர் குரல் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சமூகத்திலும் தொடர்ந்து ஒலித்தது. ரீலில் மட்டுமில்லாமல் ரியல் ஹீரோவாக இவர் தொடர்ந்து இருந்தவர் என்பதை தற்போது பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் வருத்தத்துடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். தற்போது விஜயகாந்தின் மறைவிற்கு நேரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரபல நடிகர் வையாபுரி வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
வையாபுரி கண்ணீர் பேட்டி: எதிர்பார்க்காத ஒன்றாக விஜயகாந்தின் மரணத்தை குறிப்பிட்டுள்ள வையாபுரி, தனக்கு திருமணம் செய்து வைத்தவர் விஜயகாந்த் என நினைவுகளை பகிர்ந்துள்ளார். நடிகர்களுக்கு பெரும் பாதுகாப்பாக இருந்தவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கேப்டன் மட்டுமில்லாமல் ரியல் ஹீரோவாகவும் பல விஷயங்களில் இருந்தவர் என்றும் வையாபுரி தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு எப்போதும் அவர் முதலில் வந்து நிற்பார் என்றும் அதனால்தான் அவரை கேப்டன், கேப்டன் என்று அனைவரும் அன்புடன் கூப்பிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தைரியமாக கேள்வி எழுப்புபவர்: விஜயகாந்த் ரீல் ஹீரோ இல்லை அவர் ரியல் ஹீரோ என்று மீண்டும் குறிப்பிட்ட வையாபுரி, இனி தங்களின் குறைகளை யாரிடம் சென்று சொல்வோம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த பிரச்சினையிலும் தைரியமாக முன்நின்று கேள்வி எழுப்பக்கூடியவர் கேப்டன் என்றும் மிகவும் தைரியமானவர் என்றும் வையாபுரி மேலும் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த விஜய்காந்த் தற்போது கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











