Vasanth Ravi: ஷூ பாலீஷ் போடும் காட்சி.. அதுலகூட ஸ்டைலா.. ரஜினி குறித்து வசந்த் ரவி மிரட்சி!
சென்னை: ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ரஜினி இந்தப் படத்தின்மூலம் மீண்டும் சிறப்பான வெற்றியை சுவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
படத்தில் ரஜினியின் மகனாக நடித்துள்ளார் வசந்த் ரவி. அவரது கேரக்டர் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரஜினியின் ஸ்டைலை பார்த்து மிரண்ட வசந்த் ரவி: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், விடிவி கணேஷ், சுனில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்திற்கு பிறகு உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், ஜெயிலர் படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் ரிரையர்ட் ஜெயிலராக ரஜினி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாகியுள்ளார் ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் ரஜினியை திருமணம் செய்யும் அவரது ஆசை நிறைவேறாமல் போன நிலையில், தற்போது இந்தப் படத்தின்மூலம் ரஜினிக்கு ஜோடியாகும் அவரது கனவு நிறைவேறியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு நிகழ்ந்தது. மிரட்டலான துப்பாக்கி காட்சிகளுடன் துவங்கிய இந்த ட்ரெயிலரில், பூனையாக பதுங்கி, புலியாக பாயும் ரஜினியை பார்க்க முடிந்தது. தான் நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும் அனைத்தையும் முடித்தபின்பு தான் திரும்ப முடியும் என்று கூறும்போது, ரஜினியின் முகத்தில் காணப்படும் வலி அனைவரையும் வியப்பில் ஆழத்தியது. ஸ்டைல், ஆக்ஷன் என்பதற்கு பின்னால் ஒளிந்துக் கொண்ட, ரஜினி என்ற நடிகனை இதுபோன்ற தருணங்களில்தான் ரசிகர்கள் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் இந்த ட்ரெயிலரில் வரும் ஒரு காட்சியில் தன்னுடைய மகன் வசந்த் ரவி மற்றும் பேரன் இருவருக்கும் ஷூ துடைத்துவிடுகிறார் ரஜினி. அந்த அளவிற்கு அவர் பாசமானவராக காட்டப்படுகிறார். இந்நிலையில் இந்தப் படம் குறித்து தன்னுடைய தற்போதைய பேட்டியில் பேசியுள்ள வசந்த் ரவி, இந்தக் காட்சிக்காக ரஜினிகாந்த் ஒத்திகை பார்த்துக் கொண்டதாகவும், இந்தக்காட்சி நிறைவடையும்போது, கையில் உள்ள துணியிணை அப்படி இப்படி ஆட்டி ஸ்டைலுடன் முடிப்பார் என்பதையும் குறிப்பிட்டார்.
அந்த அளவிற்கு பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தபோதிலும் வளர்ந்துவரும் நடிகரின் ஷூவை துடைக்கும் காட்சியில் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்ததுடன், அந்தக் காட்சியை எப்படி சிறப்பாக கொடுக்க முடியும் என்று யோசித்து செயல்பட்ட ரஜினியின் சிறப்பை குறிப்பிட்ட வசந்த் ரவி, இந்தப் படத்தின்மூலம் தான் ரஜினியிடம் அதிகமாக கற்க முடியும் என்று நினைத்து கமிட்டானதற்கான பலனை பல காட்சிகளில் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











