'பா.விஜய் என் இமேஜை கெடுத்துவிட்டார்'... விக்னேஷ் ஆதங்கம்!
நடிகர் விக்னேஷ் மற்றும் கவிஞர் பா.விஜய் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சென்னை: ஆருத்ரா படத்தில் தன்னை கொடூர வில்லனாக காட்டி, தன் இமேஜை கவிஞர் பா.விஜய் கெடுத்துவிட்டதாக நடிகர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பா.விஜய் நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் ஆருத்ரா. சிறுமியர் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் நடிகர் விக்னேஷ்.
அவருக்கு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்யும் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நடித்ததன் மூலம் தன்னுடைய இமேஜ் கெட்டுவிட்டதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வுக்காக ஒத்துக்கொண்டேன்
இதுகுறித்து அவர் கூறியதாவது, "சிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான படம் என்பதால் தான் நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஒரு சபலத்தில் தவறு செய்ய முனையும் நான், பிறகு திருந்தி அந்த பெண்ணை காப்பாற்றுவது போல் தான் காட்சிகள் எடுக்கப்பட்டது.

காட்சிகளை நீக்கிவிட்டனர்
ஆனால் நான் மனம் திருந்தி, அந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்க்கும் காட்சிகளை எல்லாம் பா.விஜய் நீக்கிவிட்டார். இதனால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது. எனது வீட்டிலேயே ஏன் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்தீர்கள் என கேட்கின்றனர்.

வில்லனாக தொடர்வேன்
இருந்தாலும் தொடர்ந்து வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பாக பாலா படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன். தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனாக மாற நினைக்கிறேன்.

சேதுவை நினைத்து வருத்தம்
பாலாவின் சேது படத்தில் நடிக்க முடியவில்லையே என நான் தினமும் ஒருமுறையாக வேதனைப்படுவது உண்டு. நான் தான் முதலில் அந்தப் படத்தில் ஒப்பந்தமானேன். சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று பின்னர் அந்த படம் நின்றுவிட்டது.

பாதியில் நின்ற படங்கள்
அதன் பிறகு பாலா அந்த படத்தை விக்ரமை வைத்து எடுத்தார். இதுபோல நான் நடிக்க வேண்டிய நிறைய படங்கள் பாதியிலேயே நின்றிருக்கின்றன. சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான்", எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











