முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய விஜய்ஆண்டனி.. கண்கலங்கி அழுத பிரேமலதா!
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் ஆண்டனி அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடலை பார்த்து அவர் கலங்கி நின்றார்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜய்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருமள், சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

அவரின் உடல் முதலில் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேங்காய் உடைக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரைப்பார்த்த பிரேமலதா சொல்ல முடியாத துயரத்துடன் கதறி அழுதார். இதையடுத்து விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
கோயம்பேடு ஸ்தம்பித்தது: அங்கு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வந்ததால், கோயம்பேடு ஸ்தம்பித்தது. வெளியூர்களில் இருந்து வண்டி வண்டியாக ரசிகர்களும் தொண்டர்களும் வந்துகொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக, காலை 6 மணி முதல்... மதியம் 1 மணி வரை, தீவுத்திடலில் விஜய்காந்தின் உடல் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பின் மதியம் ஒரு மணிக்கு மேல், விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீர் அஞ்சலி: மேலும் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்களின் இதய பூர்வமான அஞ்சலியை விஜயகாந்துக்கு செலுத்தி வருகிறார்கள். நேற்று தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடிகர் விஜய் வந்து அஞ்சலி செலுத்தினார். கண்ணாடி பேழை மீது கைகளை வைத்துக்கொண்டு கண்கலங்கி நின்றார். பெரிய நடிகர் சிறிய நடிகர் என்று எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் பழகக்கூடிய விஜயகாந்திற்கு ஒட்டுமொத்த திரைத்துறையும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முத்தமிட்டு அஞ்சலி: இசையமைப்பாளரும் நடிகருமான நடிகர் விஜய் ஆண்டனி, நேற்று இரவு விஜயகாந்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பேழைக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினார். இதைப்பார்த்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் கண்கலங்கினார்கள், அவர்களுக்கு விஜய் ஆண்டனி ஆறுதல் கூறினார்.


Click it and Unblock the Notifications











