குடும்பத்தை காப்பாற்ற தினமும் போராடி வாழும்.. நடிகர் விஜய் ஆண்டனி புது ட்வீட்!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவராக உள்ளார்.
தற்போது இவரது இயக்கத்தில் பிச்சைக்காரன் 2 படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கின் போது இவருக்கு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவே தன்னுடைய கேரியரை துவங்கினார். பல வெற்றிப் படங்களில், சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. துள்ளலிசை பாடல்கள் இவரது ஸ்டைல். தொடர்ந்து சிறப்பாக இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார்.

பிச்சைக்காரன் படம்
நான், சலீம் உள்ளிட்ட விஜய் ஆண்டனியின் ஆரம்ப கால படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை ஈர்த்தனர். தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னுடைய ஸ்டைலை மாற்றிக் கொண்டார். தொடர்ந்து பிச்சைக்காரன் என்ற படத்தில் தனக்கு நடிக்கவும் தெரியும் என்பதை நிரூபித்தார்.

உயிரை காக்கும் மகன்
உயிரிழக்கும் தருவாயில் உள்ள தன்னுடைய அம்மாவை காப்பாற்றும் நோக்கத்தில் 48 நாட்கள் பிச்சைக்காரனாக முகம் தெரியாத இடத்தில் வாழ்ந்து, அதன்மூலம் தன்னுடைய இந்த நம்பிக்கையின்மூலம் தன்னுடைய அம்மாவின் உயிரை காப்பாற்றும் மகனாக இந்தப் படத்தில் வாழ்ந்திருந்தார் விஜய் ஆண்டனி.

விபத்துக்குள்ளான விஜய் ஆண்டனி
இந்தப் படம் அவரது கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக இருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி. மலேசியாவில் நடைபெற்ற இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது ஸ்கை ஜெட் ஓட்டும்போது பயங்கர விபத்து ஏற்பட்டு, முகத்தில் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை
இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த விஜய் ஆண்டனிக்கு முகத்தில் அறுவை சிசிக்சை செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பிச்சைக்காரன் 2 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளதாக அறிவித்தார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து படத்தின் ஸ்னீக் பீக் ட்ரெயிலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

விஜய் ஆண்டனியின் சமூக கருத்து
அவ்வப்போது சமூக கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி பதிவிட்டு வரும்நிலையில், தற்போது இவரின் புதிய ட்வீட், கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கனும் தெற்க்கனும் கிழக்கனும் மேற்க்கனும் நம்மை போல தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

விமர்சனங்களை ஏற்படுத்திய கமெண்ட்
வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் ஆதிக்கம் சமீப காலங்களில் தமிழ்நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. அவர்களுக்கு எதிரான செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதையொட்டி விஜய் ஆண்டனியின் இந்தப் பதிவு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











