3 நாட்களில் 18 கோடி வசூலித்த பிச்சைக்காரன் 2… மகத்தான வெற்றியால் விரைவில் பிச்சைக்காரன் 3!
சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் மூன்று நாட்களில் பல கோடியை வசூலித்துள்ளது.
படத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியால் விரைவில் பிச்சைக்காரன் 3 திரைப்படம் உருவாகும் என விஜய் ஆண்டனி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி : இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம், பிச்சைக்காரன். அம்மா சென்டிமெண்ட், காதல் சென்டிமெண்ட் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தது. முதல் பாகத்தின் மகத்தான வெற்றியால் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன் 2 : ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே எழுதி இயக்கியுள்ளார். மேலும், அவரே படத்துக்கு இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வித்தியாசமான கதை : மூளை மாற்று சிகிச்சை மற்றும் அண்ணன், தங்கை பாசம் என பல்வேறு விஷயங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தெலுங்கில், 'பிச்சகாடு 2' என் பெயரில் வெளியானது.
பல கோடி வசூல் : 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், பிச்சைக்காரன் 2' உலக அளவில் ரூ.18 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் தெலுங்கில் மட்டும் ரூ.9.5 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

பிச்சைக்காரன் 3 : பிச்கைக்காரன் 2 படத்தின் வெற்றியால் மூன்றாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், பிச்சைக்காரன் 3, இரண்டாம் பாகத்தைப் போல ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பிச்சைக்காரன் 3 2025ல் வெளியாகும் என்றும் அந்த பேட்டியில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











