Vijay: களத்துல இறங்கினா இப்படி செஞ்சிருக்க முடியுமா.. விமர்சனங்களுக்கு விஜய்யின் பதில்
சென்னை: தமிழகத்தில் பெஞ்சல் புயல் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியிலும் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் பிரபலங்களும் அடுத்தடுத்த உதவிகளை செய்துவரும் நிலையில் நடிகர் விஜய்யும் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை வழங்கியுள்ளார்.
தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து விஜய் இந்த நிவாரண உதவிகளை வழங்கியுள்ள நிலையில், அவரது இந்த செயல் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அரிசி, புதுத்துணிகள் மற்றும் மளிகைப் பொருட்களை அவர் வழங்கியுள்ளதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் விஜய்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக ஃபெஞ்சல் புயல் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி அரசும் மற்ற பிரபலங்களும் தங்களது நிவாரணங்களை அடுத்தடுத்து வழங்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் சென்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இந்தப் புயலின் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
நடிகர் விஜய் நிவாரணம்: இந்நிலையில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாதிக்கப்பட்ட டிபி சத்திரம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் இன்றைய தினம் நிவாரண பொருட்களை வழங்கினார். சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைமை அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து அரிசி, புதுத் துணிகள் மற்றும் மளிகைப் பொருட்களை அவர் வழங்கியுள்ளார். இதன்போது விஜய்யை பார்க்கவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து பகிரப்பட்டன.
விஜய் செய்தது பண்ணையார்தனமா?: இந்நிலையில் அவரது இந்த செயல் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சென்று பார்க்க மாட்டாரா, இதேபோல தேர்தலுக்கும் வீடியோவில் ஓட்டு கேட்பாரா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பல கிலோ மீட்டர் பயணிக்க வைத்து தன்னுடைய அலுவலகத்தில் நிவாரணப் பொருட்களை விஜய் வழங்கியுள்ளது பண்ணையார் தனம் என்று வெளுத்து வாங்கியுள்ள அவர், முன்னதாக தன்னுடைய மாநாட்டை நடத்த நிலம் கொடுத்த விவசாயிகளை தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு விஜய் வரவழைத்தது குறித்தும் சுட்டிக் காட்டியுள்ளார்.
விஜய் தரப்பு விளக்கம்: இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களின் இடங்களுக்கு நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால், தற்போது போல அவர்களுடன் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டிருக்க முடியாது என்றும் அவர்களுடன் சகஜமாக பேச வேண்டும் என்பதற்காகவே பனையூருக்கு அழைத்ததாகவும் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை வழங்கியதுடன் விஜய் அடுத்தடுத்து பொதுமக்களிடம் உரையாடியதும் செல்பி எடுத்துக் கொண்டதும் முன்னதாக நடந்த நிலையில், விஜய் இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











