Vijay : இன்ஸ்டாகிராமில் இணைந்து 4 மில்லியன் பாலோயர்களை எட்டிய விஜய்.. இவ்வளவு வேகமா!
சென்னை : நடிகர் விஜய் முன்னதாக கடந்த 2013ம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
தற்போது லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்துள்ள விஜய், சமீபத்தில் காஷ்மீர் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார்.
அடுத்ததாக சென்னையில் லியோ படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு ஒரேகட்டமாக சூட்டிங்கை நிறைவு செய்ய லோகேஷ் திட்டமிட்டுள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான பீஸ்ட், வாரிசு படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. பெரிய இயக்குநர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போலவே வளர்ந்துவரும் இயக்குநர்களுக்கும் கொடுத்துவருகிறார் விஜய். இதையடுத்தே நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்களுக்கு அவர் தன்னுடைய படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார். ஆனாலும் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும்போது ஏற்படும் பிரஷர் உள்ளிட்ட காரணங்களால் விஜய்யின் படங்கள் அதிகமான வரவேற்பை பெற தவறிவிடுகின்றன.

லியோ படம்
தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் லியோ படத்திற்காக இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாஸ்டர் படத்தில் விஜய்யை வித்தியாசமாக காட்டியிருந்த லோகேஷ், தற்போது அவரை லியோ படத்தில் கேங்ஸ்டராக மாற்றியுள்ளார். அவருடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங் தொடர்ந்து 50 நாட்கள் நடத்தப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

சென்னையில் சூட்டிங்
அடுத்ததாக சென்னையில் நாளைய தினம் லியோ படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள லியோ படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியது. இந்நிலையில், மே மாத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

சூப்பர்ஹிட் வெற்றிக்கான அவசியம்
பீஸ்ட், வாரிசு படங்கள் சிறப்பான வசூலை குவித்திருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. அதனால் அதிரடியாக ஒரு சூப்பர்ஹிட் வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இதை லியோ படத்தின்மூலம் லோகேஷ் நிறைவேற்றுவார் என்று விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கேற்றாற்போல சிறப்பான திட்டமிடலுடன் இந்தப் படத்தின் சூட்டிங்கை நடத்தி வருகிறார் லோகேஷ்.

அடுத்தடுத்த அப்டேட்கள்
சரியான இடைவெளிகளில் லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். சமீபத்தில் வெளியான வீடியோக்களில் படத்தில் விஜய்யின் கெட்டப்பும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சிறப்பான ஒரு சம்பவத்தை செய்து ரசிகர்களை திணறடித்துள்ளார் விஜய். கடந்த 2013ம் ஆண்டில் அவர் ட்விட்டரில் இணைந்துள்ள நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

4 மில்லியன் பாலோயர்கள்
ட்விட்டரில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்தாலும் குறிப்பிட்ட சில பதிவுகளையே அவர் செய்துள்ளார். யாரையும் பாலோ செய்யவும் இல்லை. 44 லட்சம் பேர் அவரை பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இன்ஸ்டாகிராமில் அவர் இணைந்த சில மணிநேரங்களிலேயே 4 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். அதிக விரைவாக இந்த அளவிற்கு பாலோயர்களை பெற்ற பிரபலங்களின் வரிசையில் சர்வதேச அளவில் முதல் 5 இடத்தை விஜய் பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமிலும் விஜய் தற்போதுவரை யாரையும் பாலோ செய்யாமல் உள்ளார்.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய்யின் படங்களின் போஸ்டர்கள் போன்றவை வெளியிடப்பட்டாலே அவரது ரசிகர்கள் அதை உடனடியாக ட்ரெண்டிங்கில் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி இருக்கையில் அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள இந்த சம்பவத்தை கொண்டாடி வருகின்றனர். அவர் இணைந்த 99 நிமிடங்களிலேயே 1 மில்லியன் பாலோயர்கள் அவரை பின்தொடர்ந்தனர். இது பெரிய சாதனையாக அமைந்துள்ளது. திடீரென எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் இன்ஸ்டாகிராமில் விஜய் இணைந்த நிலையிலும் அவரை அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து, விஜய் எப்போதும் மாஸ்தான் என்பதை நிரூபித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











