'அரசியலுக்கு வந்தால் அண்ணா.. வராவிட்டால் பெரியார்'... சர்ச்சை கிளப்பும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்...!
அண்ணா மற்றும் பெரியாருடன் விஜய்யை ஒப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் 24ம் தேதி வருகிறது. இதனை மிகப்பெரிய அளவில் கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் இப்போதே விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சண்டைபோட ஆரம்பித்துவிட்டனர். அவரவர் இஷ்டத்துக்கு போஸ்டர்கள் தயார் செய்து பதிவிட்டு, அதை வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் போஸ்டர் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்மந்தப்பட்ட அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யுடன், அண்ணாவும் பெரியாரும் இருக்கிறார்கள். மேலே "நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார்" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தான் சர்ச்சைக்கு காரணம்.
இந்த போஸ்டருக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மூத்த நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "இது தான் இன்றைய அரசியலா? இப்படிப்பட்ட அரசியல் நமக்கு தேவைதானா? நாளுக்குநாள் இப்படி அரசியல் தரமிழந்தால் என்ன செய்ய? ஏன் அரசியலுக்கு வந்தோம். களப்பணி ஆற்றினோம் என்பது வேதனைப்படுத்துகிறது. பொதுவாழ்வு என்பது கண்ணியமானது. ஆனால், இன்றைக்கு இப்படியான காட்சிப்பிழைகளையும் பார்க்கவேண்டியுள்ளது. என்ன செய்ய? " என வேதனை தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த பிறந்தநாள் போஸ்டர் வைரலாகி வருவதால், மேலும் எதிர்ப்பு கிளம்பும் என்றே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











