ஹவுஸ் ஃபுல் காட்சிகளில் மகாராஜா.. புக் மை ஷோவில் சாதனை படைத்த விஜய் சேதுபதி!
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் எல்லோராலும் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அதில் விஜய் சேதுபதி பெயர் டாப் லிஸ்ட்டில் இருக்கும். சினிமாவில் நடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து, சைடு கேரக்ட்டர்களில் நடித்து, கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதன் பின்னர் தனக்கு கிடைத்த நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துக்கொண்டு இருந்த விஜய் சேதுபதியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. கதாநாயகன் மட்டும் இல்லாமல், வில்லன், குணச்சித்திர கதாப்பத்திரங்கள், கௌரவ வேடங்கள் என தொட்ட இடத்தில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்து வந்தார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இந்தி சினிமா பக்கம் எட்டிப் பார்த்துள்ள விஜய் சேதுபதி அங்கும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகின்றார்.

விஜய் சேதுபதி 50: இந்நிலையில் இவரது 50வது படமான மகாராஜா திரைப்படம் ரிலீசாகி விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், திரைப் பிரபலங்கள் பலர் இந்த படத்தைப் பார்த்த பின்னர் நல்ல விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். மகாராஜா படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். மகாராஜா படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மைல் கல்: படத்தின் கதை, திரைக்கதை, எடிட்டிங் மற்றும் நடிப்பு என அனைத்து விதமான அம்சங்களும் பாராட்டப்படுகின்றது. குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகர்களின் சினிமா வாழ்க்கையில் மைல் கல் படங்களாக கருதப்படும் படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுத்ததில்லை. அண்மையில் வெளியான நடிகர் கார்த்தியின் 25வது படம் தோல்வியைத் தழுவியது. விஜயின் 50வது படமான சுறா படு தோல்வியைச் சந்தித்தது. அதேநேரத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா பிராமாண்ட வெற்றியைப் பெற்றது.
ஹவுஸ் ஃபுல்: இந்நிலையில், விஜய் சேதுபதி தனது 50வது படத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார் என்றே கூறவேண்டும். கடந்த 14ஆம் தேதி ரிலீசான படத்திற்கு மக்கள் தொடர்ந்து திரையரங்கை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றனர். சென்னையின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான தியேட்டர்களில் எல்லாம், ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே மகாராஜா திரைப்படம் திரையிடப்படுகின்றது.
பிரமாண்ட வெற்றி: படத்துக்கான டிக்கெட்டினை வாங்கலாம் என முடிவெடுத்து திரையங்கிற்குச் சென்றாலும், இணையதளங்களை நாடினாலும் முடிவு ஒன்றுதான், அது, படம் ஹவுஸ் ஃபுல். டிக்கெட்டுகள் இல்லை என்பதுதான். இப்படியான நிலையில் வாரக்கடைசி நாளில் ஒரு நல்ல படத்தினை பார்க்க ஆசைப் படும் பொதுமக்களும் சரி சினிமா பிரியர்களும் சரி சினிமா டிக்கெட் பதிவு செய்யும் இணையதளமான புக் மை ஷோ தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் புக் செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது இதற்கு முன்னர் வெளியான மற்ற விஜய் சேதுபதி படங்களைக் காட்டிலும் அதிகம் எனவும், இது புது ரெக்கார்ட் எனவும் கூறப்படுகின்றது. படம் வெளியாகி, படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக மாறியுள்ள இந்த படம் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் ரூபாய் 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











