யார் யாரோ ஏதேதோ சொல்றாங்க; ஆனால் நான் வடசென்னை பார்த்தால் வருத்தப்படுவேன் - விஜய் சேதுபதி ஓபன் டாக்
சென்னை: வடசென்னை படத்தை பார்த்தால் வருத்தப்படுவேன் என நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை திரைப்படமாக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாக படம் வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் வரும் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

விடுதலை ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
இளையராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் முதல் சிங்கிள் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, சுகா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேச்சு
இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதி, 'என்னை 8 நாள்கள் இந்தப் படத்துக்காக வெற்றிமாறன் ஆடிஷன் செய்தார். அப்படி ஆடிஷன் செய்த ஒரே இயக்குநர் வெற்றிமாறன் மட்டும்தான். அவருடன் பணியாற்றியது மிக சிறப்பாக இருந்தது. ஒரு ஷெட்யூல் முடிந்த பிறகு வெற்றி எப்படி வேலை செய்கிறார் என்பதை பார்க்க வைப்பதற்காக எனது குழந்தைகளை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து சென்றேன். வெற்றிமாறன் ஒரு பொறுப்பான இயக்குநர்.

வடசென்னையை மிஸ் செய்துவிட்டேன்
வடசென்னை படத்தை மிஸ் செய்துவிட்டேன். அந்த வருத்தம் இப்போதும் என்னிடம் இருக்கிறது. அதனால் அந்தப் படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. அதை பார்த்தால் ஐயோ படத்தை மிஸ் பண்ணிவிட்டோமே என்ற வருத்தம் அதிகமாகும் என்பதால்தான் இந்த முடிவு. இதனை வெற்றிமாறனிடமும் நான் சொல்லியிருக்கிறேன். வடசென்னை 2வுக்கான கதையை அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். அது நிச்சயம் சிறப்பாக வரும்" என்றார்.

வடசென்னையில் கலக்கிய வெற்றிமாறன்
முன்னதாக, வெற்றிமாறன் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்டோரை வைத்து வடசென்னை படத்தை இயக்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான வடசென்னை படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில் இருக்கும் டீட்டெயிலிங்கும், வெற்றிமாறனின் காட்சி அமைப்புகளும் மிகச்சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். அதேசமயம் வடசென்னை மக்களை வெற்றிமாறன் தவறாக சித்தரித்துவிட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.

வடசென்னை ராஜனாக விஜய் சேதுபதி
வடசென்னை படத்தில் அமீர் ஏற்றிருந்த ராஜன் கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தில் முதல்முதலாக விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விஜய் சேதுபதியால் வடசென்னை படத்தில் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











