Vijay sethupathi :பத்து நாளைக்கு முன்னாடி.. மனோபாலா குறித்து உருக்கம் தெரிவித்த விஜய் சேதுபதி!
சென்னை : நடிகரும் பிரபல இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
அவரது உடலுக்கு நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனோபாலாவின் உடல் இன்று காலை 10.30 மணியளவில் வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

மனோபாலா உடலுக்கு விஜய் சேதுபதி அஞ்சலி : பிரபல இயக்குநர் மனோபாலா, தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை காட்டி வந்தவர். 40க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த மனோபாலா, பாதிப்பு அதிகமான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் தமிழ் திரையுலகின் நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்டவர்களும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்கள் மணிரத்னம், அமீர் உள்ளிட்டவர்களும் மனோபாலா வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பலரும் மனோபாலா மறைவு குறித்து உருக்கம் தெரிவித்துள்ளனர். நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜும் குடும்பத்தினருடன் நேரில் வந்து மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனோபாலா எந்த கஷ்டத்தையும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் என்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் கலகலப்பாக வைத்துக் கொள்வார் என்றும் பாக்கியராஜ் உருக்கம் தெரிவித்துள்ளார். அவருக்கு இவ்வளவு சீக்கிரம் இப்படி நடக்கும் என்று தான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, மனோபாலாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி, மிகவும் அதிர்ச்சியாக உள்ளதாகவும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார். கடந்த 10 -12 நாட்களுக்கு முன்புதான் அவருடன் பேசியதாகவும் மிகவும் கஷ்டமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மனோபாலாவின் உடல் இன்று காலை 10.30 மணியளவில் வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
79 வயதான மனோபாலா, இயக்குநராக 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள நிலையில், அதை விட்டுவிட்டு முழுநேர நடிகராகவே மாறினார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் காமெடி நடிகராக நடித்து வந்தார். பல படங்களில் இவர் நடித்துக் கொண்டு, தொடர்ந்து ஆக்டிவாக இருந்தார். அவருக்கு கடந்த மாதத்தில் ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்தார். இந்நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளது, தமிழ்த் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











