பாலிவுட்டில் ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி - அமீர்கானுடன் இணைகிறார்
சென்னை: தமிழில் முன்னணி நடிகராக இருந்தாலும், பிற மொழிப் படங்களிலும் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மலையாளம், தெலுங்கு படங்களை அடுத்து பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள விஜய் சேதுபதி தற்போது நடிகர் அமீர்கானுடன் இணைந்து இந்திப் படத்தில் நடிக்கப்போவதாக சினிமா வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
ரசிகர்களுக்கு ஓடிச்சென்று உதவுவது, தான் நடித்த படத்தின் தயாரிப்பாளர் பணக் கஷ்டத்தில் இருந்தால் தன்னுடைய சம்பளத்தை விட்டுக்கொடுப்பது என ஒரு நடிகன் என்ற பிம்பத்தையும் தாண்டி அனைவரிடமும் மனிதாபிமானம் காட்டி மக்களின் மனம் கவர்ந்ததால் தான் விஜய் சேதுபதி, ரசிகர்களால் மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்படுகிறார்.

தன்னுடைய சம்பளம் பற்றி பெரிதாக கவலைப்படாததால் தான் இவர் கைவசம் தற்போது டஜன் கணக்கில் படங்கள் உள்ளன. அதோடு விஜய் சேதுபதியின் பல திரைப்படங்களின் டீசர், ட்ரைலர், போஸ்டர் என தொடர்ந்து செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது புது திரைப்படத்தின் செய்தி வந்துள்ளது.
நடிகர் அமீர்கான் நடிக்க இருக்கும் ஒரு புதிய இந்தி திரைப்படத்தில், அவருடன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கப்போகிறாராம். நடிகர் அமீர்கான் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். இந்த திரைப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி வேறு மொழி திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் கட்டி வருகிறார்.

மலையாளத்தில் மார்கோனி மத்தை என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் சயிரா நரசிம்ம ரெட்டி என்னும் சுதந்திரப் போராட்ட போராளியைப் பற்றிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்போது அவரது கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அமீர்கான் நடிகர் விஜய் சேதுபதி சந்தித்து பேசியதாகவும், அப்போதே அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு இந்தி திரைப்படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவியது. அந்த தகவலை விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் உறுதி செய்து இருக்கிறார்.
ஆனால், அவர்கள் இணைந்து நடிக்கப்போகும் திரைப்படத்தின் விவரங்களை வெளியிடவில்லை.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் நடிகராக இருப்பதால், இந்த திரைப்படம் தமிழ் மொழியிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











