Jason Sanjay: இயக்குநராகும் விஜய் மகன் சஞ்சய்.. லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: நடிகர் விஜய் கோலிவுட்டின் சிறப்பான மற்றும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஹீரோவாக பல ஆண்டுகளாக உள்ளார்.
இளைய தளபதி என்று கொண்டாடப்பட்ட விஜய், தற்போது தளபதியாகவும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாக வெற்றிநடை போட்டு வருகிறார். அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் அவரது பாணியிலேயே ஹீரோவாக கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்த தகவல்கள் அதிகமாக வெளியாகின.

லைகா தயாரிப்பில் இயக்குநராகும் விஜய் மகன் சஞ்சய்: நடிகர் விஜய் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக காணப்படுகிறார். சிறுவயதிலேயே ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இளைஞனாக நாளைய தீர்ப்பு படத்தின்மூலம்தான் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து படிப்படியாக தன்னை ஏராளமான ரசிகர்கள் ஏற்கும் வகையில் மெருகேற்றிக் கொண்டார். துவக்கக்கால படங்கள் காதல் படங்களாக இருந்த நிலையில், தற்போது கமர்ஷியல் ஹிட்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப்படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மிகவும் அதிகமான எதிர்பார்ப்புடன் உள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 5ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்திலும் இணையவுள்ளார் விஜய். லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து தளபதி படத்தின் பூஜை போடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் விஜய்யும் திரைத்துறையில் கால் பதிக்கவுள்ளதாகவும் விரைவில் அவர் நடிகராக அறிமுகமாகவுள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகியவண்ணம் இருந்தது. ஆனால் தன்னுடைய மகனுக்கு நடிப்பை விட இயக்கத்தில்தான் அதிக ஆர்வம் என முன்னதாக பேட்டியொன்றில் விஜய் கூறியிருந்தார். கல்லூரி படிப்பை முடித்த சஞ்சய் தொடர்ந்து வெளிநாட்டில் புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படம் ஒன்றை சமீபத்தில் இயக்கியிருந்தார்.
வெளிநாடுகளில் திரைக்கதை எழுதுவது மற்றும் தயாரிப்பு உள்ளிட்டவற்றிற்கான படிப்புகளை முடித்துள்ள சஞ்சய், தற்போது தமிழில் இயக்குநராக களமிறங்கவுள்ளார். இதுகுறித்து லைகா புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சஞ்சய் விவரித்த ஸ்கிரிப்ட் பிடித்ததால் தற்போது அவருடன் கைக்கோர்க்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் களமிறங்கவுள்ளதாகவும் பிரபல தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் இந்தப் படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சுபாஷ்கரன் தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜேசன் சஞ்சய், முதல் படத்திலேயே லைகா போன்ற பெரிய நிறுவனத்துடன் கைக்கோர்ப்பது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு அதிகமான பொறுப்பையும் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய ஸ்கிரிப்டை தானே உருவாக்க அதிகமான சுதந்திரத்தையும் லைகா வழங்கியுள்ளது குறித்தும் சஞ்சய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











