Actor Vijay: விஜய் அரசியலுக்கு அடித்தளம்.. சினிமாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்!
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று அவரது ரசிகர்கள் கூறிவந்தனர். இதற்காக, இந்த அறிவிப்பிற்காக காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் பல நலத்திட்டங்களை அவரை முன்னெடுத்துவந்த நிலையில், அவரது அரசியல் நுழைவு அப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இன்றைய தினம் முறையான அறிவிப்பை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் விஜய். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
விஜய்யின் அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருப்பெற்றுள்ளது. அவரது இந்த அறிவிப்பை ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். கடந்த மாதம் 25ம் தேதி மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் தலைவர் உள்ளிட்டவை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கட்சியின் மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் தமிழகத்தின் இரு இடங்கள் இதற்கான பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்றும் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின்மூலம்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்திற்கு முன்னதாகவே சில படங்களில் சிறுவனாக நடித்திருந்தபோதிலும் ஹீரோவாக இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து பலவிதமான ஜானர்களில் படங்களில் நடித்து தன்னை ரசிகர்களுக்கு பிடித்தமானவராக மாற்றிக் கொண்டார். இளைய தளபதியாக இருந்த இவரை தற்போது ரசிகர்கள் தளபதியாக கொண்டாடி வருகின்றனர். இவரது படங்கள் அதிகமான வசூலை இந்திய அளவில் பெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான லியோ படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூல் சாதனை செய்துள்ளது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
The greatest of all time: இந்நிலையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏப்ரல் மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய வெங்கட்பிரபுவிடம் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு படத்தையும் விஜய் கமிட் செய்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட உள்ளதாகவும் விஜய் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு அதிர்ச்சியை கொடுத்தாலும் அவரது அரசியல் என்ட்ரி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் அரசியல் என்ட்ரி: விஜய்க்கு அரசியலில் ஈடுபடும் விருப்பம் நீண்ட காலங்களாக உள்ளது. இந்நிலையில் அவரது அரசியல் என்ட்ரிக்கு அவரது படங்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். தன்னுடைய படங்களின்மூலம் தன்னை எதிர்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துவந்த விஜய் ஒரு கட்டத்தில் அரசியல் கருத்துக்களையும் படங்கள் மூலம் பேசத் துவங்கினார். தன்னுடைய பைரவா படம் மூலம் மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையில் நடைபெறும் முறைகேட்டை காட்சிப்படுத்தினார். தமிழகத்தில் உள்ள முன்னணி கல்வி குழுமத்தை அவர் தாக்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து மெர்சல் உள்ளிட்ட படங்களிலும் அரசியல் பேசினார்.
விஜய் படங்களில் அரசியல் வசனங்கள்: தமிழர்களின் பெருமையை பேசும்வகையில் அமைந்த ஆளப்போறான் தமிழன் பாடலை மெர்சல் படத்தில் இடம்பெற செய்தார். இதில் ஜல்லிக்கட்டு குறித்த பெருமை இடம்பெற்ற நிலையில் படத்தில் மருத்துவ கொள்ளை குறித்த விமர்சனமும் இருந்தது. ஜிஎஸ்டி குறித்த விமர்சனமும் படத்தில் இருந்த நிலையில் படத்திற்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது. தொடர்ந்து அவரது சர்க்கார் படத்தின் தலைப்பே மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்தது. இந்தப் படத்தில் அரசின் இலவசங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் தனிநபர் வாக்கின் முக்கியத்துவத்தையும் இந்தப் படம் வெளிப்படுத்தியது.
அரசியல் பேசிய விஜய் படங்கள்: இந்தப் படத்தில் 49P என்ற விதியை மக்களுக்கு தெரியப்படுத்தினார். இந்தப் படத்தில் விஜய் அரசியலில் இறங்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து விஜய்யின் பிகில் படத்தில் பெண்களின் முன்னேற்றம் கதைக்களமாக கொள்ளப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்திலும் எவன் தடுத்தாலும் என் ரூட்டு மாறாதப்பா என்று சூசகமாக தன்னுடைய அரசியல் என்ட்ரியை தெரிவித்திருந்தார். இவ்வாறு சினிமாவை தன்னுடைய அரசியல் என்ட்ரிக்கு கருவியாக பயன்படுத்தியுள்ளார் விஜய். அது வெகுஜன மக்களை அதிகளவில் சென்றடைந்துள்ளது. இந்த வசனங்கள், காட்சிகள் அவருடைய அரசியல் வாழ்க்கையில் எப்படி பயன்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











