ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய கையோடு மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு சென்ற விஜய்! #ThalapathyVijay
சென்னை: ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய கையோடு நடிகர் விஜய் மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் விவேக். கடந்த 16ஆம் தேதி திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். அங்கு அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

நடிகர் விவேக் மரணம்
ஆனாலும் ஆபத்தான நிலையில் இருந்த நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 59 வயதே ஆன நடிகர் விவேக்கின் மரணம் தமிழ் சினிமாவையும் சினிமா ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அரசியல் தலைவர்கள் இரங்கல்
தனது நகைச்சுவை மூலம் சமுதாயத்திற்கான சீர்திருத்த கருத்துக்களை கூறி வந்த விவேக், சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் திகழ்ந்து வந்தார். அவரது அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அரசியல் தவைர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஜார்ஜியாவில் இருந்த விஜய்
அவரது இறுதிச்சடங்கிலும் ஏராளமான திரைத்துறை பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அப்போது தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவில் இருந்தார் நடிகர் விஜய். இதன் காரணமாக நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

நாடு திரும்பிய விஜய்
இந்நிலையில் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்த நடிகர் விஜய் நேற்று ஜார்ஜியாவில் இருந்து நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

குடும்பத்தினருக்கு ஆறுதல்
இந்நிலையில் ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய கையோடு நடிகர் விஜய் நடிகர் விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அவரது குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். நடிகர் விவேக் விஜய்யுடன் சேர்ந்து ஷாஜகான், உதயா, யூத், பத்ரி, ஆதி, நேருக்கு நேர், திருமலை, பிரியமானவளே, குஷி, குருவி, தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஹேஷ்டேக் ட்ரென்ட்
கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்திலும் நெஸி என்ற கதாப்பாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் விவேக். விஜய், விவேக் வீட்டிற்கு சென்ற தகவலை #ThalapathyVijay ஹேஷ்டேக்குடன் விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











