Vijayakanth: பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ‘தனுஷ்’ அக்காவுக்கு டாக்டர் சீட்... விஜயகாந்த்தின் ரியல் ஆக்ஷன்
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருபவர் தனுஷ்.
அவரது அண்ணன் செல்வராகவன், அப்பா கஸ்தூரி ராஜா இருவருமே இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தனுஷின் அக்கா இருவரும் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களில் தனுஷின் இளைய அக்கா கார்த்திகா தேவிக்கு கேப்டன் விஜயகாந்த் தான் டாக்டர் சீட் வாங்கிக் கொடுத்து உதவினாராம்.
தனுஷ் அக்காவுக்கு டாக்டர் சீட்
ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா. ஆத்தா உன் கோவிலிலே, நாட்டுப்புறப்பாட்டு, வீரத்தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரம் விளைஞ்ச மண்ணு, என் ஆசை ராசாவே உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் வீரம் விளைஞ்ச மண்ணு படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.
ஆரம்பம் முதலே நண்பர்களாக பழகி வந்த விஜயகாந்தும் கஸ்தூரி ராஜாவும், இந்தப் படத்திற்குப் பின்னர் நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் வந்துள்ளனர். தற்போது கஸ்தூரி ராஜா படங்கள் இயக்கவில்லை என்றாலும், அவரது மகன் தனுஷ் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். அதேபோல், அவரது மூத்த மகன் செல்வராகவன் மிக முக்கியமான இயக்குநராக உள்ளார்.
கஸ்தூரிராஜாவின் இரண்டு மகள்களும் டாக்டர்களாக உள்ளனர். சமீபத்தில் கூட பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவனை குடும்பமாக சேர்ந்து வாழ்த்தினர் தனுஷும் அவரது அக்காக்களும். தனுஷின் முதல் அக்கா விமலா கீதா பல் மருத்துவராகவும், இரண்டாவது அக்கா கார்த்திகா தேவி மகப்பேறு மருத்துவராகவும் உள்ளனர்.
இவர்களில் கார்த்திகா தேவிக்கு டாக்டர் சீட் கிடைக்க கேப்டன் விஜயகாந்த் தான் காரணமாக இருந்துள்ளாராம். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த கஸ்தூரி ராஜா, இந்தச் சம்பவம் குறித்து நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்த கார்த்திகா, நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் கட் ஆஃப் மார்க்கில் குறைவாக மதிப்பெண் எடுத்திருந்தாராம்.
இதனால், இனி டாக்டராக முடியாது என்ற விரக்தியில் வீட்டில் இருந்து அழுதிருக்கிறார் கார்த்திகா. அப்போது தற்செயலாக கஸ்தூரிராஜா வீட்டுக்குச் சென்ற விஜயகாந்த், கார்த்திகா அழுவதை பார்த்து என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார். கஸ்தூரி ராஜா இந்த கட் ஆஃப் மார்க் பற்றி சொன்னதும், உடனே ராமச்சந்திரா மருத்துவமனையின் உடையாருக்கு போன் செய்து பேசினாராம் விஜயகாந்த்.
இதனயடுத்து உடனே கார்த்திகாவை நேரில் வரச்சொன்ன உடையார், அவருக்கு மருத்துவம் படிக்க சீட் கொடுத்துள்ளார். அதன்பிறகே கார்த்திகா மருத்துவர் ஆனாராம். இதுபோல் பலருக்கும் உதவிய விஜயகாந்த், தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார் கஸ்தூரி ராஜா. பாட்ஷா படத்தின் ரஜினி ஸ்டைலில் தனுஷ் அக்காவுக்கு விஜயகாந்த் டாக்டர் சீட் வாங்கிக் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











