Vijayakanth Dead - கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார்.. உச்சக்கட்ட சோகத்தில் ஒட்டுமொத்த திரையுலகம்..
சென்னை: நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் (Vijayakanth Passed Away). கொரோனா தொற்று ஏற்பட்ட சூழலில் அவரது உயிர் இன்று பிரிந்தது. இதனால் ரசிகர்களும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கின்றனர்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜயகாந்த் சினிமா ஆசையோடு தனது நண்பர் இம்ராஹிம் ராவுத்தரோடு சென்னை வந்தார். வந்து ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்து ஒரு வழியாக பட வாய்ப்புகளை பெற்று நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சில படங்கள் சரியாக போகாவிட்டாலும் தன்னம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து நடித்து வெற்றி பெற்றார்.

கேப்டன் விஜயகாந்த்: விஜயகாந்த்தின் படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட்டடித்தன. அதன் காரணமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என்ற வரிசை தமிழ் சினிமாவில் உருவானது. சொல்லப்போனால் கிராமத்து பகுதிகளில் ரஜினி, கமல் ஹாசனை விடவும் அதிக மவுசு விஜயகாந்த்துக்கு இருந்தது என்பதுதான் யதார்த்தமான உண்மை.
நடிகர் சங்க தலைவர்: நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்று அதனையும் திறம்பட கையாண்டார். கடனில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை அவர்தான் அதிலிருந்து மீட்டார். மேலும் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர், மலேசியா சென்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார் அவர். அதுமாதிரி இன்றுவரை ஒன்று நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் என்ட்ரி: நடிகர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருந்த அவர் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் இடையில் அவர் எடுத்த சில தவறான முடிவுகள், உடல்நலக்குறைவு ஆகியவை காரணமாக சறுக்கலை சந்தித்தார். பிறகு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த அவர் கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பினார். அதனையடுத்து நடந்த தேமுதிக கட்சியின் பொதுக்குழுவிலும் அவர் கலந்துகொண்டார். எனவே விஜயகாந்த கண்டிப்பாக நலமாக இருப்பார் என ரசிகர்களும், தொண்டர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நலக்குறைவால் அவர் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











