சூப்பரா கல்லா கட்டிய தளபதி 68.. விஜய்யின் கோட் பட வசூல் இவ்வளவா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் விஜய் படம் என்ற மந்திரம் ஒன்றிற்காகவே அவரது ரசிகர்கள் கட்டுண்டனர். படம் ரசிகர்களை குறிப்பாக தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
இந்தப் படம் கடந்த 3ம் தேதி ஓடிடியிலும் வெளியான நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் எண்ணிக்கை தற்போது ஏஜீஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கால இடைவெளிகளில் இந்தப் படத்தின் வசூல் எண்ணிக்கையை தயாரிப்புத்தரப்பு தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் எப்போதுமே தன்னுடைய படத்தில் தன்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை சிறப்பாகவே பூர்த்தி செய்து வருகிறார். தற்போது தளபதி 69 படத்தில் நடித்துவரும் விஜய், இதை தன்னுடைய இறுதிப்படமாக அறிவித்துள்ளார். பாட்டு, நடனம், காமெடி, ஆக்ஷன் என தன்னுடைய படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்வகையில் அடுத்தடுத்த அம்சங்களை சிறப்பாக மெயின்டெயின் செய்து ரசிகர்களை கவர்ந்துவந்த விஜய், சினிமாவில் இருந்து இன்னும் சில மாதங்களில் விலகவுள்ளார் என்பது அவரது ரசிகர்களை வெகுவாக ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கோட் படம்: இதனிடையே கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான கோட் படமும் இதேபோன்று பல சிறப்பம்சங்களுடன் உருவாகியிருந்தது. படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை இணைத்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இணைக்கப்பட்டிருந்தன. இளவயது விஜய்யின் தோற்றமும் முன்னதாக விமர்சனங்களை பெற்ற போதிலும் பின்பு, ரசிகர்கள் ஏற்கும்வகையில் அமைந்திருந்தது. படத்தின் நீளம், திரைக்கதையில் சொதப்பல் என பல்வேறு காரணங்கள் இந்தப் படம் ரசிகர்களை சரியாக சென்று அடையாததற்கு காரணங்களாக கூறப்பட்டன.
கோட் பட வசூல்: விஜய்க்கு தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் ஏராளமான வெறித்தனமாக ரசிகர்கள் உள்ள நிலையில், இந்தப் படம் மற்ற மாநிலங்களிலும் சரியாக வசூலிக்க முடியாமல் திணறியது. கடைசியில் தமிழ் ரசிகர்கள் மட்டுமே படத்திற்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்தனர். தமிழில் 200 கோடி ரூபாய்களுக்கும் மேல் கோட் படம் வசூலித்திருந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் ஒட்டுமொத்த வசூலை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் 455 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 69 படம்: இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69 படத்தின் சூட்டிங்கில் விஜய் இணைந்துள்ளார். விஜய்யின் இறுதிப்படமான இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் பாடல் காட்சியுடன் துவங்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ள நிலையில், படத்தில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், நரேன் கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். இதனிடையே இந்தப் படம் விஜய்யின் மற்ற படங்களை காட்டிலும் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











