Actor Vijay: ஐதராபாத் சூட்டிங்கை நிறைவு செய்த தளபதி 68 டீம்.. அடுத்த வருஷம்தான் அடுத்த ஷெட்யூல்!
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் லியோ என அடுத்தடுத்த படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் சிறப்பாக அமைந்தன. இந்த இரு படங்களுமே கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையிலும் வசூல் சாதனை படைத்துள்ளன. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு மிக அதிகமான அம்சங்கள் காணப்பட்டன. படத்தின் வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடிய ரசிகர்கள், படத்தின் விமர்சனங்கள் குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் கொண்டாடி தீர்த்தனர்.
இந்தப் படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றார் விஜய். தற்போது சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. படத்தில் தந்தை, மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துவரும் நிலையில், அவரை மேலும் இளமையாக காட்ட, லாஸ் ஏஞ்சல்சில் லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு அதையொட்டிய பணிகள் நடத்தப்பட்டன. இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா என முன்னணியாக இருந்த நட்சத்திரங்கள் எல்லாம் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் எப்போதுமே வித்தியாசமான கதைக்களத்தில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர் என்பதால், தன்னுடைய படங்களில் வித்தியாசமான அணுகுமுறையுடன் படம் இயக்கும் வெங்கட் பிரபு கூட்டணியில் தற்போது தளபதி 68 படத்திற்காக இணைந்துள்ளார். வெங்கட் பிரபு தன்னை ஸ்டைலாக, வித்தியாசமாக காட்டுவார் என்பதில் முழு நம்பிக்கை கொண்டு விஜய் தளபதி 68 படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்டு, சென்னையிலேயே டைட்டில் பாடல், மேலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் விஜய் இருவேறு கேரக்டர்களில் நடித்துவரும் சூழலில் இளமையான விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் மீனாட்சி சவுத்ரி.
ஐதராபாத் சூட்டிங் நிறைவு: இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் வரும் ஜனவரி 2024, 3ம் தேதி துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐதராபாத்தில் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இங்கு அடுத்து வரவுள்ள கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நிறைவு செய்யவுள்ள படக்குழுவினர், முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கை துவங்கவுள்ளனர். படம் டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகிவரும் சூழலில் படம் குறித்த, அதன் கதைக்களம் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
புத்தாண்டில் வெளியாகும் டைட்டில்: படத்தின் டைட்டில் மற்றும் பிரமோ, பர்ஸ்ட் லுக் போன்றவை வரும் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமான ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடன் இதற்காக காத்திருக்கின்றனர். படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் பர்ஸ்ட் லுக்குடன் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு GOAT என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக படத்திற்கு பாஸ் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
விஜய் -வெங்கட் பிரபு காம்பினேஷன்: மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது தளபதி 68 படம். அட்லீ, வெற்றிமாறன் என அடுத்தடுத்த இயக்குநர்களுடன் தளபதி 68 படத்தில் விஜய் இணையவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், அவர் வெங்கட்பிரபுவுடன் இணைந்தது ரசிகர்களுக்கு உற்சாகமான அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மாஸ் என்டர்டெயினர் படத்தை கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. அதுபோல விஜய்யை வைத்து மாஸ் படத்தை கொடுப்பாரா அல்லது காமெடி என்டர்டெயினரை கதைக்களமாக எடுத்துக் கொள்வாரா என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











