நாளை பூஜை.. அக்டோபர் 5ல் சூட்டிங்.. யாரெல்லாம் கலந்துக்கறாங்க.. விஜய்யின் தளபதி 69 டீமின் பிளான்!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக இந்தப் படத்தின் நடிகர், நடிகைகளை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்து வருகிறது. இந்தப் படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ள நிலையில் நாயகியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.
முன்னதாக விஜய் -பூஜா ஹெக்டே கூட்டணி பீஸ்ட் படத்தில் இணைந்திருந்த நிலையில், படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. விஜய்க்கு இணையாக பாடல்களில் போட்டி போட்டு ஆட்டம் போட்டிருந்தார் பூஜா ஹெக்டே. இந்நிலையில் தளபதி 69 படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், இன்றைய தினம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் இறுதிப்படமாக உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் அறிவிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தது.
தளபதி 69 படத்தின் நடிகர்கள்: இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து கேவிஎன்புரொடக்ஷன்ஸ் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தளபதி 69 படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளார். இவர் முன்னதாக அனிமல் படத்தின் வில்லனாகவும் அடுத்து ரிலீசாகவுள்ள சூர்யாவின் கங்குவா படத்தின் வில்லனாகவும் நடித்துள்ள நிலையில், தளபதி 69 படத்தின் வில்லனாக இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். விஜய் -பூஜா ஹெக்டே ஜோடி முன்னதாக பீஸ்ட் படத்தில் இணைந்திருந்த நிலையில் மீண்டும் இணைந்துள்ளது.
நாளை நடக்கும் பூஜை: மேலும் படத்தில் மமிதா பைஜூ உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில் இன்றைய தினம் மேலும் படத்தின் நடிகர்களின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே தற்போது படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் இணையவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இந்த அறிவிப்பை மேற்கொள்ளவுள்ள படக்குழுவினர் நாளைய தினம் சென்னையில் படத்தின் பூஜையை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் சூட்டிங்: இதனிடையே நாளை மறுதினம் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் தொடர்ந்து ஒரு வாரம் நடக்கவுள்ளதாகவும் பாடல் காட்சியின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளதாகவும் இந்த சூட்டிங்கில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பீஸ்ட் படத்தில் இந்த கூட்டணி சிறப்பான அடுத்தடுத்த பாடல்களை அனிருத் இசையில் கொடுத்த நிலையில், மீண்டும் சிறப்பான பாடலை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











