ரோகிணி தியேட்டர் ஓனருக்கு பதவி.. அண்ணன் பாஜகவாம்..விஜய்யின் அரசியல் அஜெண்டா என்ன?
சென்னை: நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது காலங்காலமாக தமிழகத்தில் நடந்துக் கொண்டுதான்இருக்கிறது. இதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி, சிவாஜி கணேசன், எஸ்எஸ்ஆர், சந்திரசேகர் என பல தமிழ் நடிகர்களை கைக்காட்ட முடியும், சினிமாவை இவர்கள் தங்களது அரசியலுக்கு பிரசார காரணிகளாகவும் பயன்படுத்தி வந்தனர்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கி செயலாற்றி வருகிறார். இதனிடையே நீண்ட நாட்களாக அரசியலில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அந்த முயற்சியிலிருந்து விலகியுள்ளார். இதனிடையே தற்போது நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

சினிமா டூ அரசியல்: நடிகர்கள் சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சத்தை கையில் கொண்டு அதன்மூலம் அரசியலிலும் சாதித்த வரலாறு தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது. அந்த வரிசையில் எம்எஸ் சுப்புலட்சுமி தன்னுடைய பாடல்கள் மூலம் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்ட நிகழ்வுகள் அரசியல் வரலாறு. தொடர்ந்து நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, விஎன் ஞானகி, எஸ்எஸ்ஆர், சந்திரசேகர் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்ததுடன், அரசியலிலும் அதை தொடர்ந்தனர். இவர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தமிழக முதல்வர்களாகவும் தமிழக மக்களை கொண்டாட செய்தவர்கள்.
விஜய்யின் அரசியல் என்ட்ரி: இவர்களில் பலர் சினிமாவையும் தங்களது அரசியல் என்ட்ரிக்கு டூலாக பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு சினிமா சிறப்பாகவே கைக்கொடுத்தது. இவர்களின் வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகர் விஜய். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதற்கு முன்னதாக தன்னுடைய கட்சி துவக்கத்திற்கான காய்களை நகர்த்த துவங்கியிருந்தார். மாணவர்களை மையமாக வைத்து இவரது முந்தைய மற்றும் அரசியல் கட்சி அறிவிப்பிற்கு பிந்தைய செயல்பாடுகள் இருந்த நிலையில், இம்மாத இறுதியில் தன்னுடைய கட்சி மாநாட்டை நடத்தவுள்ளார் விஜய்.
விஜய்யின் தளபதி 69 படம்: தற்போது நடித்துவரும் தளபதி 69 படத்துடன் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதையொட்டி தளபதி 69 படம் அரசியல் ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் எக்ஸ் போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் நடிக்கவுள்ள நிலையில், அவரின் செயல்பாடுகளை மையமாக கொண்டு இந்தப் படத்தை இயக்கவுள்ளார் ஹெச் வினோத். இந்தப்படம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து பார்க்கையில் இந்தப்படத்தையும் தன்னுடைய அரசியலுக்கு விஜய் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தல்: நடிகர் விஜய்யின் கட்சியின் கொள்கைகள் குறித்து அடுத்தடுத்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொள்கைகளே இல்லாமல் விஜய் செயல்பட்டு வருவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இதனிடையே தன்னுடைய முதல் கட்சிமாநாட்டில் இதுகுறித்து விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். கடந்த மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி முழுமையாக போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து இந்தக் கட்சி தனித்து அல்லது பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்த தேர்தலை எதிர்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சியை பலப்படுத்தும் விஜய்: தன்னுடைய கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்திவரும் விஜய், நிர்வாகிகளையும் சிறப்பாக இணைத்து வருகிறார். இதனிடையே, ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண், தவெகவின் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு கமிட்டியின் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் சுபைர் ஜமால் தெரிவித்துள்ளார். இவரது அண்ணனும் ரோகிணி திரையரங்க உரிமையாளருமான வினோத் பி செல்வம், பாஜகவின் மாநில இளைஞர் அணித் தலைவராக உள்ள நிலையில், தற்போது அவருடைய தம்பிக்கு விஜய்யின் தவெகவில் முக்கியமான உறுப்பினர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தவெகவின் அரசியல் கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











